உலகில் பல புதுமைகளை செய்துவரும் கூகுள் நிறுவனம், டிரைவர் இல்லாத கார் ஒன்றை தயாரித்து வெளியிடும் தொழில்நுட்பத்தில் ஈடுபட்டு வருகிறது. இன்னும் மூன்று வருடங்களில் பொதுமக்கள் டிரைவர் இல்லாத காரை பயன்படுத்தக்கூடும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சாலையில் உள்ள போக்குவரத்தை கண்காணித்து காரை ஓட்டுவதற்காக காரில் ஜி.பி.எஸ் சென்சார், காரை சுற்றிலும் கேமராக்கள் மற்றும் ராடார் டிரான்ஸ்மீட்டர்கள் ஆகியவற்றை பொருத்து சோதனை பார்க்கப்பட்டு வருவதாகவும், இந்த தொழில்நுட்பம் நிறைந்த கார், வரும் 2017ஆம் ஆண்டு பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்றும் கூகுள் தெரிவித்துள்ளது.
இந்த காரை முழுமையாக வடிவமைத்தவுடன் சாலையில் செல்வதற்குரிய அனுமதி பெற்று விற்பனைக்கு வரும் என தெரிகிறது. தற்போது தெற்கு கலிபோர்னியாவில் உள்ள ஒரு பகுதியில் மட்டும் இந்த காரை சோதனை செய்து பார்க்க அரசிடம் அனுமதி பெற்றுள்ளதாகவும், காரை முழுமையாக வடிவமைத்தவுடன் அமெரிக்கா முழுவதும் இந்த காரை பயன்படுத்த அனுமதி பெறப்படும் என கூகுள்அறிவித்துள்ளது.எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் தொடர்ச்சியாக விபத்து ஏற்படாமல் இந்த காரை செலுத்த முடியும் என்றும் இந்த தொழில்நுட்பம் அடங்கிய கார் பயன்பாட்டிற்கு வந்தபிறகு விபத்துக்கள் பெருமளவு குறைந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.
குழந்தைகளை கூட தனியாக இந்த காரில் பயணம் செய்ய அனுப்ப முடியும் என கூறப்படுகிறது. அமெரிக்க மக்கள் இந்தகாரின் வரவை பெரிதும் எதிர்பார்த்து வருகின்றனர்.
















