கொழும்பு குணசிங்கபுர பகுதியில் மத்திய பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து தனியார் பஸ் தரிப்பிடத்தை நோக்கி மஞ்சற் கடவையால் நடந்து கொண்டிருந்த மூன்று மாத கர்ப்பிணிப் பெண்ணை தனது ஜீப் வண்டியினால் மோதி மரணத்தை ஏற்படுத்திவிட்டு சிங்கப்பூருக்கு தப்பிச் சென்ற பிரபல தனியார் வைத்தியசாலையின் பாதுகாப்பு பணிப்பாளர் இன்று வெள்ளிக்கிழமை (9) கைது செய்யப்பட்டுள்ளார்.
சிங்கப்பூரின் ஊடாக அமெரிக்கா செல்ல உத்தேசித்திருந்த குறித்த சந்தேக நபர், இலங்கை பொலிஸாரின் தீவிர நடவடிக்கை காரணமாக மீண்டும் நேற்று இலங்கை திரும்பியுள்ளார். இதனையடுத்து இன்றுக் காலை அவர் புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததையடுத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இதனையடுத்து சந்தேக நபர் தொடர்பில் பொலிஸார் சர்வதேச பொலிஸாருக்கு அனுப்ப ஏற்பாடு செய்த கைதுக்கான சிவப்பு அறிவித்தல் இரத்துச் செய்யப்பட்டதாகவும் சந்தேகநபர் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி சந்தேக நபர் மொன்டரோ ரக ஜீப் வண்டியில் விபத்தை ஏற்படுத்திவிட்டு வண்டியை நிறுத்தாது சென்றுள்ளதுடன் அந்த ஜீப்பை நண்பர் ஒருவரிடம் கொடுத்து ஒழித்து வைத்துவிட்டு சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றிருந்தார்.
இச்சம்பவத்தின்போது தனது கணவர், சகோதரன் மற்றும் ஆறு மாதக் குழந்தையுடன் களுத்துறையிலிருந்து கண்டி பூஜாபிட்டியிலுள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்த பாத்திமா முஜீபா என்ற 27 வயதான மூன்று மாத கர்ப்பிணிப் பெண் கொல்லப்பட்டிருந்தார்.
சம்பவம் தொடர்பில் சீ.சீ.ரி.வி கண்காணிப்பு கமராக்களை ஆய்வு செய்த பொலிஸார் நிலான் பியரத்ன என்ற பிரபல தனியார் வைத்தியசாலையொன்றின் பாதுகாப்பு பணிப்பாளரே விபத்தை ஏற்படுத்திய K Q 4994 என்ற மொண்டரோ ரக ஜீப் வண்டியை செலுத்தியுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டது.
குறித்த பணிப்பாளர் இரவு நேர களியாட்ட விடுதி ஒன்றில் இருந்துவிட்டு அதி வேகமாக போதையுடன் ஜீப் வண்டியை செலுத்தி வந்த நிலையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
















