மத வன்முறையால் அளுத்கமவில் பதட்டம்: பௌத்த பிக்குகள் தலைமையில் முஸ்லிம் வணிக நிலையம் தீக்கிரை!

religionஇலங்கையில் தொடரும், மத வன்முறைகளின் ஒருகட்டமாக, அளுத்கம நகரில் உள்ள முஸ்லிம் வர்த்தகரின் வணிக நிலையம் ஒன்று பௌத்த பிக்குகள் தலைமையிலான சிங்கள பௌத்த குண்டர்களால் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது.

மூன்று பௌத்த பிக்குகள் தலைமையில் சென்ற சுமார் 250 பேர், இந்த வர்த்தக நிலையத்துக்கு தீவைத்து எரித்துள்ளனர்.

இதனால் இரண்டு மாடி வர்த்தக நிலையம் முற்றாக எரிந்து நாசமானது.

இந்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளரின் சகோதரரால், சிறுவன் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக குற்றம்சாட்டியே பௌத்த அடிப்படைவாதிகளால் இந்த வர்த்தக நிலையத்துக்குத் தீவைக்கப்பட்டுள்ளது.

எனினும், இது தமக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சதி என்று வர்த்தக நிலையத்தின் உரிமையாளராக, மொகமட் நயீம்கான் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

சிறுவர் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் தமது சகோதரர் கைது செய்யப்பட்டு, வர்த்தக நிலையத்துக்குள் எடுக்கப்பட்ட எல்லா காணொலிப் பதிவுகளும் ஆராயப்பட்ட பின்னர் அவர் நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டு விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

விகாரை ஒன்றில் கலந்துரையாடப்பட்ட பின்னரே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து சிறிலங்கா காவல்துறைக்கு தெரியப்படுத்தப்பட்டு, அதற்கு பாதுகாப்பு வழங்குமாறு அவர்கள் கேட்கப்பட்டதாக தாம் அறிந்ததாகவும் மொகமட் நயீம்கான் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் மாலையே வர்த்தக நிலையத்துக்குத் தீவைக்க முடிவு செய்யப்பட்டிருந்ததாகவும், ஆனால், நேற்று அதிகாலையிலேயே தீவைப்பு இடம்பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, இந்த தாக்குதலைக் கண்டித்து தர்கா நகரில் நேற்று முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை மதியத் தொழுகைக்குப் பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags: , ,

Leave a Reply