இந்திய கடல் பகுதியில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் புழல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழக கடலோர காவல் படையினர் நேற்று முன்தினம் அபீக் கப்பலில், கேப்டன் ஜேடி தலைமையில் தமிழக–ஆந்திர கடல் எல்லை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 11 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 படகுகளையும் கைப்பற்றினர்.
கைதான இலங்கை மீனவர்கள் 11 பேரும் நேற்று காலை 10 மணியளவில் காசிமேடு பகுதிக்கு கொண்டு வரப்பட்டு சென்னை துறைமுக பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
துறைமுக பொலிசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள், இலங்கையை சேர்ந்த ரோசன்(வயது 36), அமீத்(42), அமிதா(28), தோனி(28), நமிலா(53), தரங்கா(31), சவிந்தா(23), மதுரகா(28), டுமிந்தகுமாரா(24), அஜித்பிரசன்னா(22), புத்தகல்சா(20) என்பதும், அவர்கள் நந்தில், பதுங்கா ஆகிய படகுகளில் இந்திய கடல்பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததும் தெரியவந்தது.
பின்னர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த பொலிசார், நேற்று மாலை 11 பேரையும் எழும்பூரில் உள்ள சென்னை பெருநகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.
















