ஆளும் ராஜபக்ச அரசாங்கத்தின் வீழ்ச்சி ஆரம்பித்து விட்டது: விக்டர் ஐவன்!

Mahinda-Rajapaksa1இலங்கையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் வீழ்ச்சி ஆரம்பித்துவிட்டதாக பிரபல அரசியல் விமர்சகரும், மூத்த ஊடகவியலாளருமான விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கட்டுரையொன்றை எழுதியுள்ளார். அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஜனாதிபதியின் மிக நம்பிக்கைக்குரியவர்களாக இருந்த பலரும் இப்போது அவருக்கு எதிரான நிலைப்பாட்டுக்கு மாறிவருகின்றனர்.

இதன் பிரதிபலிப்பு கசினோ தொடர்பான நாடாளுமன்ற வாக்கெடுப்பில் தெளிவாக புலப்பட்டது. அதுவரை காலமும் மெதுவாக சரிந்து கொண்டிருந்த அரசாங்கத்தின் செல்வாக்கு சடுதியாக சரிந்து, அரசாங்கத்தின் வீழ்ச்சியை தீவிரப்படுத்தியுள்ளது.

விடுதலைப் புலிகளுடனான யுத்த வெற்றிக்குப் பின்னர் பொதுமக்கள் ஜனாதிபதி மீது அபரிமித நம்பிக்கை வைத்திருந்தனர். தங்களது மீட்பராக அவரைக் கொண்டாடினர். ஆனால் அந்த நம்பிக்கைகளை தக்க வைத்துக் கொள்ள ஜனாதிபதியால் முடியவில்லை. அதன் காரணம் அவரிடம் தூரதிருஷ்டிமிக்க சிந்தனைகளோ, நாட்டை வளப்படுத்தும் திட்டங்களோ இல்லை.

விடுதலைப் புலிகளுடனான யுத்தம் கூட சண்டித்தனமாகவே வெற்றிகொள்ளப்பட்டது. இராஜதந்திர ரீதியிலான வழிமுறைகள் அதில் கையாளப்படவில்லை.

மேலும் நாட்டை ஆளும் வழிமுறை, சர்வதேச நாடுகளுடனான தொடர்பு என்பவற்றிலும் இராஜதந்திர வழிமுறைகளுக்குப் பதிலாக சண்டித்தன வழிமுறையையே மஹிந்த ராஜபக்ஷ கைக்கொண்டுள்ளார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை. நாட்டின் முக்கிய வருமானமீட்டும் வழியான சுற்றுலாத்துறை நலிந்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் அச்சுறுத்தப்படுகின்றனர். வெளிநாட்டு முதலீட்டாளரகளும் அச்சுறுத்தப்படுகின்றனர்.

இவை எல்லாவற்றையும் விட தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரை இரண்டாம் தரப் பிரஜைகளாக மதிக்கும் அரசின் செற்பாடுகள் காரணமாக சிறுபான்மை மக்களின் அதிருப்தியை அரசாங்கம் சம்பாதித்துள்ளது. அவர்களின் நம்பிக்கையைப் பெறத் தவறிவிட்டுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக அரசாங்கத்தின் வீழ்ச்சி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் தாக்கம் வரும் தேர்தல்களில் எதிரொலிக்கும் என்றும் விக்டர் ஐவன் தனது கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Tags: , ,

Leave a Reply