தமிழகம், இலங்கை மீனவர்களிடையேயான 2வது கட்ட பேச்சுவார்த்தை கொழும்பில் இன்று நடைபெற உள்ளது. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் அச்சுறுத்தல்களுக்கும், இன்னல்களுக்கும் உள்ளாகின்றனர். பன்னாட்டு கடல் எல்லையை கடந்து மீன்பிடிப்பதாக குற்றம்சாட்டப்படும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து இலங்கை சிறைகளில் அடைத்து விடுகின்றனர்.
இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண தமிழக- இலங்கை மீனவர் பிரதிநிதிகள் கடந்த ஜனவரி 27-ந் தேதி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மீன்வளத்துறை இயக்குனர் அலுவலகத்தில் பேச்சுவார்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து 2-ம் கட்ட பேச்சுவார்த்தை ஏப்ரல் 13-ந்தேதி கொழும்புவில் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வந்த நிலையில் பேச்சுவார்தை நடைபெறுவதும் தடைப்பட்டது.
தற்போது கொழும்பில் 2வது கட்ட பேச்சுவார்த்தை இன்று நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மீனவர் சங்கப் பிரதிநிதிகள் 17 பேர், தமிழக, புதுச்சேரி மற்றும் மத்திய அரசு அதிகாரிகள் 9 பேரும் கலந்து கொள்ள இலங்கை சென்றுள்ளனர். இன்றும் நாளையும் இரு நாட்கள் இந்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
















