தனியாக விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை கடத்தி காதை அறுத்து கொலை செய்து கிணற்றில் வீசிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- வேலூர் அருகே உள்ள வாலாஜா, வன்னியர்மேடு கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் வனிதா (வயது 8), அதே பகுதியில் உள்ள பள்ளியில் 3–ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி விடுமுறை என்பதால் அரக்கோணத்தை அடுத்தபெருமாள் ராஜபேட்டை கிராமத்தில் வசிக்கும் தாத்தா ரங்கநாதன் வீடுற்கு வனிதா வந்திருந்தார். நேற்று மதியம் வீட்டின் அருகே வினிதா விளையாடி கொண்டிருந்தார் .நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த ரங்கநாதன் தேடி பார்த்துவிட்டு , அரக்கோணம் தாலுகா போலீசில் அவர் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் இன்று காலை திருத்தணி அருகே உள்ள கார்த்திகேயபுரம், பி.வி.என்.கண்டிகையில் உள்ள விவசாய கிணற்றில் சிறுமி உடல் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் திருத்தணி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் விரைந்து வந்து உடலை மீட்டு பார்த்தபோது சிறுமியின் 2 காதுகளும் அறுக்கப்பட்டு நகை பறிக்கப்பட்டிருந்தது. வனிதா வீட்டின் அருகே விளையாடிக் கொண்டு இருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம வாலிபர்கள் அவரை தூக்கிச் சென்றதை சிலர் பார்த்து உள்ளனர்.
சிறுமி காதில் தங்க கம்மல் போட்டு இருந்தார். அந்த நகைக்காக வனிதாவை மர்ம ஆசாமிகள் கடத்தி சென்று உள்ளனர். அவர் கூச்சல் போட்டதால் கழுத்தை நெரித்து கொன்று காதுகளை அறுத்து நகையை திருடி இருக்கலாம் என்று தெரிகிறது. பின்னர் உடலை கிணற்றில் வீசி இருக்கிறார்கள். சிறுமி பிணமாக கிடந்த இடம் கடத்தப்பட்ட இடத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. இருக்கும். கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் திருத்தணி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
















