ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு தொடர்ந்தும் அரசினால் இழுத்தடிப்பு. பாதிக்கப்பட்ட மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு.

demoசிறீலங்கா இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு காணாமல் போனவர்கள் தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் கடந்த 2012 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ஆட்கொணர்வு மனு நீதிமன்றத்தினால் தொடர்ந்தும் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் இம்மாதம் 08.05.2014 அன்று இந்த ஆட்கொணர்வு மனு முல்லைத்தீவு நீதிமன்றத்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது வழமை போன்றே அரசதரப்பு வக்கீல் தனது குடும்ப பிரச்சினையை காரணம் காட்டி வழக்கை அடுத்த மாதம் ஒத்திவைக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக இடம்பெற்று வரும் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மக்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றார்கள். 2009 மே மாதத்தில் பல ஆயிரக்கணக்கான போராளிகளும், பொது மக்களும் சிறீலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்தனர். இவ்வாறு சரணடைந்தவர்களில் பெரும்பாலானோர் சிறீலங்கா அரசால் காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளனர்.

காணாமல் போன பல ஆயிரக்கணக்கான போராளிகள், பொது மக்களின் உறவினர்களில் 12 பேர் மட்டுமே இந்த ஆட்கொணர்வு மனுவை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

இவ்வாறு இந்த 12 பேரினாலும் தொடரப்பட்ட வழக்கு எதிர்வரும் 05.06.2014 இல் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. அன்றைய நாளில் இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பினை விரைந்து வழங்கக் கோரி முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற வளாக முன்றலில் இடம்பெறவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்தில்,

சிறீலங்கா அரசினால் காணாமல் போக செய்யப்பட்ட பேர்ராளிகள் மற்றும் பொது மக்களின் உறவினர்கள், அரசியல் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், பொது மக்கள் அனைவரையும் கலந்துக் கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்காக உங்கள் ஆதரவை வழங்குமாறு வேண்டுகின்றார்கள் பாதிக்கப்பட்ட மக்கள்.

Tags: , , ,

Leave a Reply