வவுனியா வடக்கு கொல்லர்புளியங்குளம், பெரியகுளம் மக்களுக்குச்சொந்தமான இரண்டரை ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள சுடலைக்காணியை முஸ்லிம் ஒருவருக்கு நெடுங்கேணி பிரதேச செயலரால் விலைக்கு கொடுக்கப்பட்டமையால் கனகராயன்குளம் பொலிஸ் நிலையப்பகுதியில் பதற்றம் நிலவுகின்றது.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,
வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலர் பரந்தாமன், நெடுங்கேணிப்பிரதேச காணி உத்தியோகத்தர் குகேந்திரன் ஆகியோர் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளை சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் தாரை வார்க்கும் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாகவும், இதற்காக அவர்கள் பல இலட்சம் ரூபாய்கள் பணத்தினை பெற்றுவருவதாகவும் அறிய முடிகின்றது.
இந்நிலையில் கொல்லர்புளியங்குளம், பெரியகுளம் மக்களுக்குச்சொந்தமான ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இரண்டு கிராமங்களையும் சேர்ந்த மக்கள் சுடுகாடாகப்பயன்படுத்திய காணியை தாவீது கொட்டல் உரிமையாளரான முஸ்லிம் ஒருவருக்குத்தாரைவார்த்திருந்ததை அறிந்த மக்கள், நெடுங்கேணி பிரதேச செயலரிடம் சென்று அந்தக்காணி சுடுகாடு என்றும் இரண்டு கிராம மக்களுக்கும் அதுவே காலாகாலமாக சுடுகாடாக பயன்படுத்தப்பட்டதையும் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
அதன் போது மக்களுக்கு பதிலளித்த பிரதேச செயலர், அந்தக்காணி தமக்கு அது சுடலைக்காணி என்று தெரியாது என்றும் அந்தக்காணியை தாம் கையளிக்கும் நடவடிக்கையை கைவிடுவதாகவும் வாக்குறுதி வழங்கியிருக்கின்றார்.
இதன் பின்னர் சுடுக்காட்டுக்குச் சென்ற குறித்த முஸ்லிம் நபர் அந்தக்காணியில் கட்டடம் ஒன்றை அமைக்கும் நடவடிக்கையினை முன்னெடுத்திருக்கின்றார். அங்கு திரண்ட மக்கள் அது சுடுகாட்டுக்குச் சொந்தமான காணி என்றும் கட்டடம் கட்டமுடியாது என்றும் தாம் அனுமதிக்கப்போவதில்லை என்றும் தெரிவித்திருக்கின்றனர். அதன் போது குறித்த நபர் தனக்கு காணி பிரதேச செயலரினால் வழங்கப்பட்டதாகவும் அதற்குரிய போமிற் தன்னிடம் உள்ளதாகவும் கூறியிருக்கின்றார்.
இதனை அடுத்து மக்கள் இது தொடர்பில் முறையிடுவதற்கு கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருப்பதாகவும் பொலிஸார் முஸ்லிம் நபருக்கு சாதகமான முறையில் செயற்பட்டுவருவதால் மக்கள் ஆத்திரமடைந்திருப்பதாகவும் தெரியவருகின்றது.
















