புலம்பெயர் அமைப்புக்களுக்கும் தனிப்பட்ட நபர்களுக்கும் தடை விதிப்பது பொருத்தமாகாது: பிரித்தானியா!

uk_flagஇலங்கை அரசாங்கத்தினால் புலம்பெயர் அமைப்புக்களும், தனிப்பட்ட நபர்களும் தடை செய்யப்பட்டமைக்கு பிரித்தானியா எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு வெளியே இயங்கி வரும் புலம்யெர் அமைப்புக்கள் சிலவற்றையும், தனிப்பட்ட நபர்களையும் தடை செய்துள்ளமை குறித்து பிரித்தானியா கவனம் செலுத்தி வருவதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஹூகோ ஸ்வாயார் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய அமைப்புக்கள் தனிப்பட்ட நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் இலங்கை அரசாங்கத்தின் உரிமை தொடர்பில் மாற்றுக் கருத்து கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அந்த உரிமைக்கு மதிப்பளிப்பதாகத் தெரிவித்துள்ளார். தெளிவான ஆதாரங்கள் இருக்கும் இடத்தில் இவ்வாறு தடை விதிப்பதில் பிரச்சினை கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் இவ்வாறான தடைகள் பிறப்பிக்கப்பட்டால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவா தெரிவித்துள்ளார். குறிப்பாக இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து கேள்வி எழுப்பபட்டு வரும் நிலையில் இவ்வாறு அமைப்புக்களுக்கு தடை விதிப்பது பொருத்தமாகாது என அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான நடவடிக்கைகள் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வழியமைக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஆர்வலர்கள் மீது தொடர்ந்தும் இலங்கையில் அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். கருத்துச் சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து பிரித்தானியா பல தடவைகள் இலங்கைக்கு வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Tags: , ,

Leave a Reply