இந்தியாவில் முதல் முறையாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு 5 ஆண்டு காலம் தடை நீடித்து உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவு நேற்று முன்தினம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை பி.டி.ஐ. நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட நாள் முதல் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தடை நீடிக்கப்படுவது வழக்கம்.
இதற்கான அறிவிப்பு மே மாதம் அல்லது ஜூன் மாதம் வெளியிடப்பட்டு வந்தன.
2009ஆம் ஆண்டு இறுதிப் போரில் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது.
இந்த நிலையிலும் இந்தியா விடுதலைப்புலிகள் மீது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தடை நீடிப்பை பேணி வந்தது. தற்போது இந்தியாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வருமா? வராதா என்ற நிலையில் இந்திய மக்களவை தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ளன.
இவ்வாறான சூழ்நிலையில், காங்கிரஸ் அரசின் உள்துறை அமைச்சகம் ஒரேயடியாக 5 ஆண்டுகாலத்துக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் மீது தடையை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது, என்று அந்த செய்திச்சேவை குறிப்பிட்டது.
















