வடக்கு கிழக்கில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினர் முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு நிகழ்வுகளை தடுக்கும் நோக்கில் உசார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். நினைவு நிகழ்வுகளில் ஈடுபடும் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்யுமாறு இலங்கை பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
ஈழத்தில் முள்ளிவாய்க்காலில் 2009ஆம் ஆண்டு இலங்கை அரசு மேற்கொண்ட பெரும் எடுப்பிலான யுத்தத்தில் ஒன்றரை லட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. பல்லாயிரக் கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளனர். இந்த யுத்தத்தில் வன்னிப் பெருநில மக்கள் முற்று முழுதான இழப்புகளுக்கு முகம் கொடுத்தனர்.
இந்நிலையில் குறித்த யுத்தத்தில் விடுதலைப் புலிகளின் வசமுள்ள அனைத்து நிலப்பகுதிகளையும் இலங்கை இராணுவத்தினர் கைப்பற்றியிருந்தனர். குறித்த வெற்றி விழாவை நாளை கொண்டாடும் முகமாக மாத்தறை நகரில் பாரிய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ் மக்கள் தரப்பால் குறித்த நாட்கள் இனப்படுகொலை நாட்களாக கொண்டாடப்புடுகின்றது. அத்துடன் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நடவடிக்கையிலும் ஈடுபடலாம் என்பதனால் வடக்கு கிழக்கில் உள்ள இராணுவத்தை உசார் நிலையில் வைத்திருக்கிறது இலங்கை பாதுகாப்பு அமைச்சு.
யுத்த வெற்றியை பாரியளவில் கொண்டாடும் இலங்கை அரசு யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூறுவதை புலிகளை நினைவுகூறுவதாக குறிப்பிட்டு தடைவித்தித்துள்ளது. தடையையும்மீறி இன்றும் நாளையும் மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்படலாம் என்பதனால் படையினர் உசார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
















