ஒன்றரை இலட்சம் தமிழ் உயிர்களை நரபலி வேட்டையாடி, தமிழீழ நடைமுறை அரசைச் சிதைத்து, ஈழத்தீவு முழுவதையும் தனது படையாட்சிக்குள் சிங்களம் கொண்டு வந்து இவ்வாரத்தோடு ஐந்து ஆண்டுகள் நிறைவடைகின்றன. சிங்கள இனவெறியின் உச்சக்கட்டமாகவும், தமிழினத்தின் வரலாற்றில் குருதிக் கறைபடிந்த பக்கமாகவும் விளங்கும் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நாள், விடுதலை வேண்டி நிற்கும் தமிழீழ தேசத்திற்குப் பல பாடங்களைக் கற்பித்த நாளாகவும் திகழ்கிறது.
தர்மத்தின் சக்கரத்தில் நின்று உலகம் சுழலவில்லை என்பதையும், ஒவ்வொரு நாடுகளினதும் பொருண்மிய – பாதுகாப்பு நலன்களின் அடிப்படையிலேயே உலக ஒழுங்கு நகர்கின்றது என்பதையும் இடித்துரைத்த நாள் இது. 1970களின் முற்பகுதியில் ஆயுத எதிர்ப்பியக்கமாக முகிழ்க்கத் தொடங்கிய தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு தலைமையேற்க முன்வந்தபொழுது தான் முன்னெடுக்கப் போகும் போராட்டத்திற்கு உலகம் உறுதுணை நிற்கும் என்று ஒரு பொழுதும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் நம்பியிருக்கவில்லை. தமிழீழ தாயக உறவுகளையும், தாய்த் தமிழக உறவுகளையும், உலகத் தமிழர்களையும் முற்று முழுதாக நம்பியே தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்குத் தலைவர் அவர்கள் தலைமை தாங்கினார்.
தமிழீழத் தாயகத்தை ஆக்கிரமித்து நின்ற சிங்கள ஆயுதப் படைகளைத் தலைமறைவு கெரில்லா பாணியிலான நடவடிக்கைகள் மூலம் நிலைகுலைய வைத்தும், தமிழீழத் தாயகத்தில் இயங்கிய சிங்கள நிர்வாக இயந்திரத்தை சிதைத்தும், ஏக காலத்தில் தமிழீழ மக்களின் விடுதலை வேட்கையைத் தட்டியெழுப்பியும், அதனூடாக தேசச் சுதந்திர இயக்கத்தைக் கட்டியெழுப்பி, அவ்வியக்கத்தை தேசிய விடுதலை இராணுவமாக மாற்றிமையப்பதே ஆரம்பத்தில் தலைவரது மூலோபாயமாக இருந்தது.
1980களின் நடுப்பகுதியில் சிங்கள ஆயுதப் படைகளை முகாம்களுக்குள் முடக்கி, யாழ்ப்பாணக் குடாநாட்டை முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தும், தமிழீழத் தாயகத்தின் ஏனைய பகுதிகளில் எதிரியின் இருப்பைக் கேள்விக்குறியாக்கியும், தனது மூலோபாயத்திற்கு செயல்வடிவம் கொடுத்த தலைவர் அவர்கள், அதன் அடுத்த கட்டமாக அன்று உலகின் நான்காவது வல்லரசாக விளங்கிய பாரதத்துடன் வீரப்போர் புரிந்து 1990ஆம் ஆண்டு தமிழீழத் தாயகத்தின் கணிசமான பகுதிகளை எதிரியின் ஆதிபத்தியத்திலிருந்து விடுவித்தார். இதன் தொடர்ச்சியாக விடுவிக்கப்பட்ட பகுதிகளில் நடைமுறை அரசை நிறுவியும், தமிழீழ நடைமுறை அரசின் இறையாண்மை நிலைநாட்டப்பட்ட பகுதிகளைப் பாதுகாப்பதற்காக நிரந்தரப் படையணிகளையும் உருவாக்கிய தலைவர் அவர்கள், எதிரியின் ஆக்கிரமிப்பிற்கு உட்பட்டிருந்த தமிழீழத் தாயகத்தின் ஏனைய பகுதிகளை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளையும் அயராது முன்னெடுத்தார்.
இவ்வாறு மண்மீட்பின் மூலம் தேச விடுதலையை ஒவ்வொரு கட்டமாக முன்னகர்த்திய தலைவர் அவர்கள், அனைத்துலக அங்கீகாரமின்றித் தமிழீழத் தனியரசை நிறுவுவது சாத்தியமில்லை என்பதையும் தெளிவாக உணர்ந்திருந்தார். 1984ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவிலிருந்து வெளிவரும் ‘சண்டே’ எனும் சஞ்சிகையின் ஊடகவியலாளரான அனித்தா பிரதாப்பிற்கு வழங்கிய செவ்வியின் பொழுது இதனைத் தெளிவாகத் தலைவர் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.
‘உங்கள் கணிப்பில் தமிழீழத்தை எப்பொழுது அடைவீர்கள்?’ என்று அனித்தா பிரதாப் வினவிய பொழுது பின்வருமாறு தலைவர் அவர்கள் தெரிவித்தார்:
‘விடுதலைப் போராட்டத்திற்குக் காலவரையறையோ அல்லது ஒரு பூர்வாங்கத் திட்டமோ இருக்க முடியாது. தமிழீழத்திலும் உலக அரங்கிலும் உருவாகும் நிலைமைகளைப் பொறுத்தே இது அமையும்.’
இதன் மூலம் இரண்டு செய்திகளைப் பூடகமாகத் தலைவர் அவர்கள் வெளிப்படுத்தினார். ஒன்று தமிழீழத் தாயகத்தில் பரிபூரண மக்கள் புரட்சி வெடித்து, எமது தாய்மண் மீட்டெடுக்கப்பட வேண்டும். இரண்டாவது எமது போராட்டத்திற்கு அனைத்துலக அங்கீகாரம் கிட்ட வேண்டும். இவ்விரண்டும் நிகழ்ந்தேறும் பொழுதே தமிழீழத் தனியரசின் உருவாக்கமும் சாத்தியமாகும் என்பதே அப்பொழுது தலைவர் உணர்த்திய செய்தியாகும்.
இது விடயமாக மீண்டும் ஒன்றரை ஆண்டுகள் கழித்து 1985ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் ‘சண்டே’ சஞ்சிகைக்கு வழங்கிய செவ்வியில் தனது தீர்க்கதரிசனப் பார்வையைத் தலைவர் அவர்கள் வெளிப்படுத்தினார். இச்செவ்வியின் பொழுது தலைவர் அவர்களிடம் கேட்கப்பட்ட பல கேள்விகளில் இரண்டு முக்கியமான கேள்விகள் இருந்தன. இவ்விரு கேள்விகளும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் எதிர்காலம் பற்றியதாகவே இருந்தன. இவற்றை அனித்தா பிரதாப் அவர்களே எழுப்பியிருந்தார். இக் கேள்விகளில் ‘அண்மிய வருங்காலத்தில் என்ன நடக்கலாம் என நினைக்கிறீர்கள்?’ என முதலாவது கேள்வியை அனித்தா பிரதாப் எழுப்பிய பொழுது, பின்வருமாறு தலைவர் அவர்கள் கூறினார்:
‘தமிழீழத்திற்கான போராட்டம் வளர்ந்து நாளுக்கு நாள் உக்கிரம் அடைந்து வருகிறது. தமிழீழத் தனியரசு அமைவது திண்ணம். இந்த வரலாற்று நிகழ்ச்சியை எந்தவொரு சக்தியாலும், அது எத்தனை வலிமை வாய்ந்ததாக இருந்தாலும், தடுத்து நிறுத்தவே முடியாது. இதற்கு மாறாக ஏதாவது நிகழுமானால் அது தமிழ் மக்கள் இப் போராட்டத்தில் அழிவதாகத்தான் இருக்கும். நாம் எல்லோரும் அழிந்து தமிழினமே இத்தீவிலிருந்து முற்றாக சங்காரம் செய்யப்படலாம்.’
இதேபோன்று பல தசாப்தங்கள் நீடித்த தென்னாபிரிக்க மக்களின் உரிமைப் போராட்டத்துடன் தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஒப்பிட்டு, ‘தென் ஆபிரிக்கா போன்று சுதந்திரப் போராட்டமானது மிக நீண்ட காலத்திற்கு எவ்வித முடிவுமின்றி இழுபட்டுச் செல்லக்கூடும் அல்லவா?’ என்று அனீத்தா பிரதாப் வினவிய பொழுது, எவ்வித சலனமும் இன்றி மற்றுமொரு தெளிவான பதிலைத் தலைவர் அவர்கள் அளித்தார்:
‘ஒரு விடுதலைப் போராட்டத்திற்கு எவ்வித காலவரம்பையும் நிர்ணயிக்க முடியாது. இறுதி இலட்சியத்தை அடையும் வரை போராட்டம் தொடர்ந்து நடைபெறும். இது ஒரு மக்கள் யுத்தம். ஆகவே ஒரு சில கெரில்லாப் போராளிகள் இறந்து போவதால் விடுதலைப் போராட்டம் முடிவுக்கு வருவதில்லை. மக்களின் உறுதிப்பாடு, சர்வதேச ஆதரவு மற்றும் சூழ்நிலைகள்தான் ஒரு விடுதலைப் போராட்டத்தின் வெற்றிக்கு வழிவகுக்கின்றன. எமது வாழ்நாளிலேயே தமிழீழத்தை அடையலாம் என்ற நம்பிக்கையில் நாம் போராடுகிறோம். எமது விடுதலைப் போராட்டத்தின் பழுவை அடுத்த பரம்பரை மீது சுமத்த நாம் விரும்பவில்லை. எமது கடின உழைப்பின் பயனை அவர்கள் அனுபவிக்க வேண்டும். எமது வாழ்நாளில் எமது இலட்சியம் நிறைவேறாது போகலாம். அப்படியாயின் அடுத்த தலைமுறைக்குப் போராட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்குண்டு.’
எவ்வளவு தீர்க்கதரிசமான வார்த்தைகள் இவை. இருபத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்னர் தலைவர் அவர்களின் நாவிலிருந்து உதிர்ந்த இவ்வார்த்தைகளின் முழுமையான அர்த்தபரிமாணத்தை முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நிதர்சனப்படுத்தியது என்றால் அது மிகையில்லை.
தலைவர் அவர்களின் எண்ணத்தின் வழிநின்று ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபன் அவர்கள் தனது இறுதி நாட்களில் தெரிவித்தது போன்று, தமிழீழ மக்கள் பரிபூரண எழுச்சி கொண்டு, தமிழீழ மண்ணில் மக்கள் புரட்சி வெடிக்கும் வரை தமிழீழ மண்மீட்பு என்பது முழுமையடையாது என்பது எம்மினத்திற்கு முள்ளிவாய்க்காலில் இடித்துரைக்கப்பட்டது. அதே நேரத்தில் கடைசித் தமிழன் இருக்கும் வரை தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் ஓயப்போவதில்லை என்ற மெய்யுண்மையும் முள்ளிவாய்க்காலில் உலகிற்கு இடித்துரைக்கப்பட்டது.
இன்று தமிழீழத் தாயகத்தில் ஆயுதப் போராட்டம் இடைநிறுத்தம் பெற்றுவிட்டது. ஆனால் தமிழீழத் தாயகத்திலும் சரி, உலகின் எட்டுத் திசைகளிலும் சரி, தமிழீழ தேசிய அசைவியக்கம் செத்துவிடவில்லை. தமிழீழத் தனியரசுக்கான குரல் இன்றும் தமிழீழத்திலும் ஒலிக்கிறது. தாய்த் தமிழகத்திலும் ஒலிக்கிறது. புலம்பெயர் தேசங்களிலும் ஒலிக்கிறது.
தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்ட அசைவியக்கம் இன்று மூன்றாவது தலைமுறையின் கையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட 1970களிலும், அது வீரியம்கொண்டு வீறுநடைபோடத்தொடங்கிய 1980களிலும், அன்றைய தலைமுறையிடம் தம்பியாக அறியப்பட்டு, 1990களிலும், புத்தாயிரத்தின் முதற் தசாப்தத்திலும் அடுத்த தலைமுறையிடம் அண்ணனாக அறியப்பட்ட தலைவர் அவர்கள், விடுதலை என்ற கனலை இன்று சுமக்கத் தொடங்கும் மூன்றாவது தலைமுறையிடம் அப்பாவாக அறியப்படுகின்றார்.
எந்தவொரு வினைக்கும் எதிர்வினை இருக்கும் என்ற பௌதீக விதியைப் போன்று, அடக்குமுறை தொடரும் வரை அதற்கெதிரான போராட்டங்களும் தொடரும் என்பதே இயற்கையின் நியதியாகும். இந்த நியதிக்கிணங்கக் கடைசித் தமிழன் இருக்கும் வரை தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் மீண்டும் வீரியம் பெற்று என்றோ ஒரு நாள் தமிழீழத் தனியரசு நிறுவப்படும் என்பதே முள்ளிவாய்க்காலில் நாம் கற்றுக் கொண்டிருக்கும் பாடமாகும். இதற்கான ஆதர்ச ஒளியாகவும், வழிகாட்டலாகவும், தம்பியாகவும், அண்ணனாகவும், அப்பாவாகவும் அறியப்படும் தலைவர் அவர்களின் சிந்தனையே விளங்குகின்றது.
நன்றி: ஈழமுரசு
















