ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இந்தியாவின் புதிய பிரதமராகத் தேர்வாகியுள்ள நரேந்திர மோடிக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்தார். இதற்காக அவர் மூன்றரை மணி நேரத்தைச் செலவிட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பெரு வெற்றியீட்டியுள்ள பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளரும், இந்தியப் பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ளவருமான நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக் நேற்று முன்தினம் முதலாவதாக வாழ்த்து தெரிவித்ததுடன், இலங்கைக்கு வருமாறும் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நிலவரங்கள் நேற்று முன் தினம் காலை 11 மணிக்கே பா.ஜ.க. ஆட்சியமைப்பதற்கான தெளிவான சமிக்ஞைகளை காண்பித்திருந்தது.
உடனடியாகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, நரேந்திர மோடிக்குத் தொலைபேசி மூலம் வாழ்த்துத் தெரிவிக்க முயன்றார்.
ஆனால் அவருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தொலைபேசி அழைப்பை நரேந்திர மோடி எடுக்கவில்லை. அவர் தனது தாயாரிடம் ஆசி பெறுவதற்காக அப்போது சென்று கொண்டிருந்தார்.
தாயாரைச் சந்தித்து ஆசி பெற்று விட்டுத் திரும்பிய பின்னர், பிற்பகல் 2.30 மணியளவிலேயே ஜனாதிபதி மஹிந்தவால், நரேந்திர மோடியுடன் பேச முடிந்தது.
















