இலங்கையர் எனக் கூறிக்கொண்டு 19 வருடம் வசித்துவந்த இந்தியர் கைது: உளவாளி எனச் சந்தேகம்!

arrestதன்னை ஒரு இலங்கையர் எனக் கூறிக்கொண்டு 19 வருட காலமாக அநுராதபுரத்தில் வசித்துவந்த இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். இவரிடமிருந்து பல ஆவணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த ஆவணங்கள் வெவ்வேறு நாடுகளில் வைத்து அவருக்கு வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றையடுத்தே இவர் தங்கியிருந்த இடத்தை பொலிஸார் சுற்றிவளைத்துத் தேடுதல் நடத்தினார்கள். இதன்போது அவர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடமிருந்த ஆவணங்கள் பலவும் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஹம்சா ஜமால்டீன் என்று தன்னுடைய பெயரை மாற்றிவைத்துக்கொண்டு அநுராதபுரத்தில் வசித்துவந்த இவர், அடிக்கடி வடபகுதிக்குச் சென்றுவருவதாகவும் விசாரணைகளின் போது தெரியவந்திருக்கின்றது. கைது செய்யப்பட்ட நபர் இந்தியப் புலனாய்வு நிறுவனம் ஒன்றுக்காக பணிபுரிபவராக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளார்கள்.

இவரிடமிருந்து கைப்ற்றப்பட்ட அடையாள அட்டையின்படி 44 வயதான இவர் போலியான கடவுச்சீட்டுக்களைப் பயன்படுத்தி பல்வேறு நாடுகளுக்குச் சென்று வந்திருப்பதும் தெரியவந்திருக்கின்றது. தன்னுடைய கடவுச்சீட்டு அழிந்துவிட்டதாகக் கூறி இலங்கைக் கடவுச் சீட்டு ஒன்றையும் இவர் பெற்றிருப்பதாக முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்திருக்கின்றது.

Tags: ,

Leave a Reply