நீண்டகாலமாக இழுத்தடிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் எமது இனப் பிரச்சினைக்கு நிலையான தீர்வை உத்தரவாதப்படுத்தக்கூடிய கொள்கைகளை உங்களுடைய தலைமையில் அமையவுள்ள புதிய அரசாங்கத்திடமிருந்து நாம் ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம் என இந்தியாவின் புதிய பிரதமராகத் தெரிவாகியுள்ள நரேந்திர மோடிக்கு அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளர் சுரேஷ் பிரேமைச்சந்திரன் தெரிவித்திருக்கின்றார்.
இந்தச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:
“தங்களது சீரிய தலைமையின்கீழ் இந்தியப் பாராளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியின் தலைமையிலான கூட்டணி அபரிமித வெற்றியை ஈட்டியுள்ளதுடன் தங்களது கட்சியான பாரதீய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மை ஆசனங்களுடன் ஆட்சி அமைக்கும் வெற்றியீட்டியுள்ளமையையிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்கள் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
தங்களது திறமையான தலைமையின்கீழ் வலுவான இந்தியா உருவாக வேண்டும் என்று விரும்புவதுடன் உருவாகும் என்றும் நம்புகின்றோம்.. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியா மற்றும் இலங்கைத் தமிழர்களிடையில் மொழி, மதம் மற்றும் கலாசார .உறவுகள் பின்னிப்பிணைந்துள்ளன. தங்களது சீரிய தலைமையின்கீழ் எமது சகோதரத்துவ உறவுகள் மேலும் வலுப்பெற வேண்டும் என்று நாம் விரும்புகின்றோம்.
தங்களது திறமைமிக்க தலைமைத்துவத்தின்கீழ் அமைய விருக்கும் புதிய அரசாங்கத்திடமிருந்து நீண்டகாலமாக இழுத்தடிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் எமது இனப் பிரச்சினைக்கு நிலையான தீர்வை உத்தரவாதப்படுத்தக்கூடிய கொள்கைகளை நாம் ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்.
யுத்தம் முடிவுற்றவுடன் இயல்பாகத் திரும்பியிருக்க வேண்டிய அமைதிக்குப் பதிலாக, இலங்கைத் தமிழர்களின் இருப்பே நாளுக்குநாள் அழிவுப்பாதையில் சென்றுகொண்டிருக்கின்றது. அவர்களது வாழ்வு மிகவும் ஆபத்தானக மாறிவருகின்றது. இலங்கை அரசு தனது முழு அதிகாரத்தையும் ஆயுதப்படைகளையும் பயன்படுத்தி தமிழர்களின் நிலங்களை அபகரிப்பதுடன் அவர்களது வாழ்வாதாரத்தையும் பறித்தெடுக்கின்றது. இலங்கை அரசு தமிழர்களுக்கெதிராக நன்கு திட்டமிட்ட வகையில் மூர்க்கத்தனமான வன்முறைகளை அமுல்படுத்துகின்றது. அவர்களின் நாளாந்த வாழ்வும் பாதுகாப்பும் அனைத்து வகைகளிலும் அச்சத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளது..
எமது மக்களின் விடியல்குறித்து முழுமையாகவும் அக்கறையுடனும் கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது. ஆகவே மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பாக விரிவான கலந்துரையாடலை மேற்கொள்வதற்கு வசிதியாக கூடிய விரைவில் தங்களின் பொன்னான நேரத்தின் ஒருபகுதியை எமக்காகவும் ஒதுக்கி எமது வேண்டுகோள்களைச் செவிமடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.
மீண்டும் எமது வாழ்த்துக்களும் வணக்கங்களும்.
















