ஈழத்தழிழர் விடயத்தில் கவனம் செலுத்துவேன்; வைகோவிடம் உறுதியளித்தார் நரேந்திரமோடி

narendra-modiஈழத்தமிழர்களின் பாதுகாப்புத் தொடர்பில் உரிய கவனம் செலுத்துவேன் என்று உறுதியளித்துள்ளார் நாளை இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்கவுள்ள நரேந்திரமோடி. ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு உறுதி வழங்கியுள்ளார்.

இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளாக ஆட்சி நடத்திய காங்கிரஸ் கட்சி, அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மண்கெளவியது. அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற பாரதீய ஜனதாக் கட்சி மோடி தலைமையில் புதிய அரசு அமைக்கவுள்ளது.

பாரதீய ஜனதாக் கட்சியுடன், தமிழகத்தில் கூட்டணி அமைத்து, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ போட்டியிட்டிருந்தார். ஆயினும் அவர் தோல்வியடைந்திருந்தார். இந்த நிலையில் வெற்றி பெற்று புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திரமோடியை நேற்று நேரில் சென்று சந்தித்தார் வைகோ.

இந்தச் சந்திப்பின் போது, இந்திய மத்திய அரசு, ஈழத் தமிழர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் வெளிவிவகாரக் கொள்கை வகுப்பிலுள்ள சோனியாவின் (முன்னைய ஆட்சி நடத்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி) கைக் கூலிகளை வெளியேற்ற வேண்டும் என்று வைகோ வலியுறுத்தினார்.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த வைகோ, “”ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இந்த மே மாதம் தமிழர்களுக்குத் துயரமான மாதம் ஆகும். 2009 மே 17, 18 திகதிகளில் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் சிங்கள அரசால் கொன்று குவிக்கப்படடனர். அதற்கு முழுக்க முழுக்க ஆயுத உதவி செய்து, இனப்படுகொலை நடக்கக் காரணமாக சோனியா காந்தியும் அவர் இயக்கிய காங்கிரஸ் அரசும் தான் செயல்பட்டன.

நான் சென்னையில் ஒரு கூட்டத்தில் குறிப்பிட்டேன். காங்கிரஸ் அரசு செய்த துரோகத்தை, நரேந்திரமோடி அரசு ஒருபோதும் செய்யாது, சிங்கள அரசுக்கு உதவாது, ஈழத்தமிழர்கள் பாதுகாப்புக்கு மோடி அரசில் வழிபிறக்கும் என்று குறிப்பிட்டேன். இவற்றையெல்லாம் நரேந்திர மோடியுடனான சந்திப்பின் போது தெளிவான எடுத்துரைத்தேன்” என்று அவர் தெரிவித்தார்.

இருவருக்கும் இடையே கலந்துரையாடலின் முடிவில் “”ஈழத்தமிழர்களின் பாதுகாப்பு தொடர்பில் நான் உரிய கவனம் செலுத்துவேன்” என்று நரேந்திர மோடி உறுதி வழங்கினார் என்று வைகோ தெரிவித்தார்.

Tags: , ,

Leave a Reply