வங்கிகளின் தன்னியக்க பண இயந்திரங்களில் உரிய அட்டையை செலுத்தி தனிநபர் அடையாள எண்களை அழுத்தி பணத்தை எடுப்பதற்கான செயன்முறைக்கு மாற்றீடாக விரல்களிலான குருதிக் குழாய்களின் அடிப்படையிலான உயிரியல் கணிப்பீட்டு தொழில்நுட்பமொன்று போலந்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஜப்பானிய தொழில்நுட்பக் கம்பனியான ஹிராசியும் போலந்து வங்கிச் சேவை வழங்குனரான ஐரிகார்ட் எஸ்.ஏ. நிறுவனமும் இணைந்து இந்த புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளன.
இந்த தொழில்நுட்பத்தின் கீழ் போலந்தில் 1730 தன்னியக்க பண இயந்திரங்களை ஸ்தாபிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த புதிய முறைமையின் பிரகாரம் ஒருவர் வங்கியால் வழங்கப்பட்ட அட்டையை பயன்படுத்தவும் தனது தனிநபர் அடையாள எண்களை அழுத்தவோ அவசியமில்லை. அதற்குப் பதிலாக வெறுமனே அந்த இயந்திரத்திலுள்ள ஊடு காட்டும் கருவியில் தனது விரலை வைத்தால் போதுமானது.
இதன் போது அந்த ஊடு காட்டும் கருவி பயன்பாட்டாளரது விரலினூடாக புறச்சிவப்பு கதிர்களைச் செலுத்தி அவரது விரலிலுள்ள குருதிக் குழாய்களின் கட்டமைப்பை படம் பிடித்து அவரது ஆளடையாளத்தை உறுதி செய்கிறது.
விரல்களிலான குருதிக் குழாய்களின் வடிவமைப்பு ஒருவருக்கு ஒருவர் வேறுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
















