யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்த ஏன் அனுமதி வழங்கப்படவில்லை – TNA

Mavai-Senathirajah3யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்த ஏன் அனுமதி வழங்கப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா இன்றைய தினம் பாராளுமன்றில் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தில் உயிரிழந்த படையினருக்கு மட்டும் அஞ்சலி செலுத்தப்பட்டதாகவும், உயிரிழந்த தமிழ் மக்களுக்கு ஏன் அஞ்சலி செலுத்தப்படவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். பாராளுமன்றில் கூட யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்களுக்காக அஞ்சலி செலுத்த முடியாத நிலையில், நாட்டில் எவ்வாறு நல்லிணக்கம் ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உயிரிழந்தவர்களுக்காக கோயில்களில் அஞ்சலி செலுத்தக் கூட உயிரிழந்த தமிழ் மக்களின் உறவினர்களுக்கு படையினர் அனுமதியளிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்தக் கூடாது என்ற நோக்கிலேயே கடந்த வாரம் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மூடப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாவை சேனாதிராஜாவின் உரைக்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் கடுமையாக இடையூறை ஏற்படுத்தியிருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அஞ்சலி செலுத்தக் கூடாது என அரசாங்கம் அறிவித்திருந்ததாகவும், மக்களுக்கு அஞ்சலி செலுத்த அரசாங்கம் தடை விதிக்கவில்லை எனவும் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

Tags: , ,

Leave a Reply