யாழ்ப்பாண இராட்சியத்தை ஆண்ட கடைசித் தமிழ் மன்னனான சங்கிலியனின் வாரிசான ராஜா றெமிஜியஸ் வடக்கு மாகாண ஆளுனராகப் பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார்.
ராஜா றெமிஜியஸ் கனகராஜா தற்போது நெதர்லாந்து நாட்டில் வசித்து வருகிறார்.
அவர் தம்மை வடக்கு மாகாண ஆளுனநராக நியமித்தால், அரசியல் பிரச்சினைகளுக்குச் சுமுகமான தீர்வு காண முடியும் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
தம்மீதான தடையை நீக்கி, அதிகாரபூர்வமாக அழைப்பு விடுத்தால், தாம் நாடு திரும்பி வடக்கிலுள்ள மக்களுக்குச் சேவையாற்றத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
நெதர்லாந்தில் தங்கிலுள்ள ராஜா றெமிஜியஸ் கனகராஜா இன்னமும் அரச நடைமுறைகளையே பின்பற்றுகிறார்.
இவர் கடந்த மாதம் நெதர்லாந்து சென்றிருந்த சிறிலங்காவின் அமைச்சர் ராஜித சேனாரத்னவை சந்தித்துப் பேசியுள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்ட அவர்,
நெதர்லாந்தில் உள்ள சிறிலங்கா துதரகத்தில் அமைச்சர் ராஜித சேனாரத்னவை சந்தித்து, சிறிலங்காவின் அரசியல் மற்றும் சமூக விவகாரங்கள் தொடர்பாக, குறிப்பாக வடக்கின் நிலைமைகள் குறித்துப் பேசினேன்.
வடக்கிற்கு ஒரு இராணுவ ஆளுனர் தேவையில்லை என்றும் சிவில் ஆளுனரே தேவை என்றும், நான் அந்தப் பணியை ஆற்றத் தயாராக இருப்பதாகவும் அவரிடம் கூறினேன்.
போர் முடிந்து ஐந்து ஆண்டுகளாகி விட்ட நிலையிலும் முன்னாள் இராணுவ அதிகாரியே, வடக்கில் ஆட்சி நடத்துகிறார்.
வரும் ஜூனில் மற்றொரு பாதுகாப்பு அதிகாரியே மீண்டும் ஆளுனராக நியமிக்கப்படவுள்ளார்.
இது தொடரக் கூடாது இந்தநிலை மாற்றப்பட வேண்டும்.
சிறிலங்கா அரசாங்கம் அனுமதித்தால், ஒரு அமைச்சராகவோ அல்லது வடக்கு மாகாணசபைக்கும், சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையில் ஒரு தூதுவராகவோ கூடப் பணியாற்றவும் தயாராக இருக்கிறேன்.
















