மே 18ஆம் திகதிக்கு பின்னும் நினைவேந்தல் செய்யத் தடை ;பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்துக்கு இராணுவம் அறிவுறுத்து

may16-anjaliவன்னியில் நடந்து முடிந்த கொடூரமான போரில் உயிரிழந்த தமிழ் மக்களுக்கு மே மாதம் 18ஆம் திகதி அஞ்சலி செலுத்த முடியாது என்று தடுத்து வந்த இலங்கை இராணுவம், இந்த மாதத்தின் எந்தவொரு நாளிலும் நினைவேந்தலை நடத்துவதற்குத் தடை விதித்துள்ளது.

கடந்த ஒரு வாரமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மூடப்பட்டிருந்தமையால் அது மீளத் திறக்கப்படும் இன்றையதினம் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளை நேற்று இராணுவ சிவில் நிர்வாகக் காரியாலயத்துக்கு அழைத்த இராணுவத்தினர் அஞ்சலி நிகழ்வை நடத்த வேண்டாம் என்று அறிவுறுத்தினர். சட்டத்தை மீறிச் செயற்பட்டால் வேண்டத்தகாத நிகழ்வுகள் நடக்கும் என்று இந்தச் சந்திப்பின் போது இராணுவத்தினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம் ஒருபோதும் சட்டத்தை மீறிச் செயற்படமாட்டார்கள் என்று ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் பதிலளித்துள்ளனர். இராணுவத்தின் யாழ். மாவட்டக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதயபெரேராவின் சார்பில் பிரிகேடியர் அபய நாயக்க இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டார்.

மே 18ஆம் திகதி மாணவர்கள் அஞ்சலி நிகழ்வை நடத்துவார்கள் என்ற அச்சம் காரணமாகவே பல்லைக்கழகம் ஒரு வாரத்துக்கு இழுத்து மூடப்பட்டது. மே 18ஆம் திகதி விடுதலைப் புலிகளின் தலைமை கொல்லப்பட்ட நாள் என்பதால் அந்தத் தினத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் எதனையும் போரில் கொல்லப்பட்ட பொது மக்களுக்காக நடத்த முடியாது என்று அரசு தெரிவித்திருந்தது. ஆனால் அந்தத் தினம் கடந்த பின்னரும் அஞ்சலி நிகழ்வுகளுக்கு இராணுவம் தடை விதித்துள்ளது.

Tags: , ,

Leave a Reply