இராணுவத்தின் பிடியில் இசைப்பிரியா மற்றும் உசாளினி என்று ஊடகங்களில் வெளியான புகைப்படங்களில் இருக்கும் இரு பெண்கள் தொடர்பில் இராணுவத்துக்கு தெரியாது என (எப்போதும் போல) இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர்கள் யார், எவர் என்பது தொடர்பில் எங்களுக்குத் தெரியாது. அவர்களின் பெயர்கள் இசைப்பிரியா, உஷாலினி என்பதைக் கூட ஊடகங்கள் வாயிலாகவே நாம் அறிந்து கொண்டோம்.
இசைப்பிரியா மற்றும் அவருடன் உள்ள பெண் தொடர்பாக ஊடகங்களில் வெளியான புகைப்படங்கள் மற்றும் செய்திகளுடன் இராணுவத்தின் விசாரணை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்படும்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கமைய போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இராணுவத்தின் விசாரணை நீதிமன்றத்தின் கீழ் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இலங்கை இராணுவத்துக்கு எதிராக சனல் – 4 தொலைக்காட்சியினால் வெளியிடப்பட்ட வீடியோ காட்சிகள், உண்மையானவையா அல்லது பொய்யானவையா என்பது தொடர்பிலும் இந்த இராணுவ விசாரணை நீதிமன்றம் விசாரணை செய்து வருகின்றது.
இது தவிர, குறித்த புகைப்படத்தில் இருப்பவர்கள் யார் என்பது தொடர்பில் இராணுவத்துக்கு தெரியாது என்று இராணுவ பேச்சாளர் மேலும் கூறினார்.
















