பாஜக மூத்த தலைவர் நிதின் கட்காரி தொடர்ந்த அவதூறு வழக்கில், ஜாமீன் பெற ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மறுத்த ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவாலை சிறையிலடைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட அரவிந்த் கேஜ்ரிவால், நீதிமன்றக் காவலில் திஹார் சிறையிலடைக்கப்பட்டார். மே 23 தேதி வரை இரண்டு நாள்களுக்கு அவர் சிறையில் இருப்பார்.
ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், பாஜக மூத்த தலைவர் நிதின் கட்காரியை ஊழல்வாதி என விமர்சித்திருந்தார்.
இந்தியாவின் பெரிய ஊழல்வாதிகள் பட்டியல் என்று ஒரு பட்டியலை ஜனவரி மாதம் வெளியிட்ட அரவிந்த் கேஜ்ரிவால், நிதின் கட்காரியையும் அதில் இணைத்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கட்காரி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, அரவிந்த் கேஜ்ரிவால் நேரில் ஆஜரானார். அப்போது, டெல்லி பெருநகர நீதிமன்ற நீதிபதி கோமதி மனோச்சா, கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
அதற்கு, “ஊழலுக்கு எதிரான முயற்சியாக ஊழல்வாதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் எந்தத் தவறும் இல்லை. அரசியல் ரீதியாகவே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, ஜாமீன் பெற பிரமாணப் பத்திரம் எதுவும் தாக்கல் விரும்பவில்லை” என்று கேஜ்ரிவால் தரப்பில் வாதிடப்பட்டது.
அப்போது, “ஜாமீன் வேண்டும் எனில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வது சட்ட நடைமுறை. சாதாரண மனிதன் என்ற பெயரில் கட்சி நடத்தும் நீங்கள், சிறப்புச் சலுகையை கேட்கிறீர்களே” என்று நீதிபதி கூறினார்.
அதற்கு பதிலளித்த கேஜ்ரிவால், “நான் எந்தக் குற்றமும் செய்யதததால் ஜாமீன் பெற விரும்பவில்லை. ஆகவே, சிறை செல்லவும் தயார்” என்றார்.
இதையடுத்து, கேஜ்ரிவாலை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டு, இந்த வழக்கின் விசாரணையை வரும் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதன் தொடர்ச்சியாக, கெஜ்ரிவாலை கைது செய்த போலீசார், அவரை திஹார் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
கேஜ்ரிவால் ஜாமீன் பெற ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மறுத்தது, ஆம் ஆத்மியின் நாடகம் என்று பாஜகவும் காங்கிரஸும் விமர்சித்துள்ளது.
அதேவேளையில், ரூ.10 ஆயிரத்துக்கான பத்திரம் என்பது பிரச்சினை இல்லை என்றும், இது தங்கள் கட்சியின் கொள்கை தொடர்பானது என்றும் ஆம் ஆத்மி விளக்கம் அளித்துள்ளது.
















