கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் வின்ஸ். இவரது மனைவி நிஷா. இந்த தம்பதியின் மகன்கள் எட்வின் (வயது 16) 10–ம் வகுப்பு மாணவர். காட்வின். இவர் 9–ம் வகுப்பு படித்து வருகிறார்.நேற்று எட்வினும், காட்வினும் சில நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது அவர்களுக்கு ஒரு விபரீத ஆசை ஏற்பட்டது.
அவர்களில் யாராவது ஒருவர் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து கொள்வது என்றும், ரெயில் அருகில் வரும்போது எழுந்து ஓடி வர, அதை செல்போனில் படம் பிடித்து பேஸ்புக்கில் வெளியிட வேண்டும் என்று முடிவு செய்தனர்.
உடனே மாணவர் எட்வின் தான் தண்டவாளத்தில் தலை வைத்து படுப்பதாக கூறினார். அதன்படி அந்த பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் எட்வின் தலை வைத்து படுத்துக் கொண்டார். அந்த காட்சியை அவரது தம்பி காட்வின் மற்றும் நண்பர்கள் செல்போனில் படம் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மின்னல் வேகத்தில் அந்த வழியாக ஒரு ரெயில் வந்தது.
அதை பார்த்து எட்வின் எழுந்து ஓடி வருவதற்குள் அவர் மீது ரெயில் மோதி தலை துண்டாகி பரிதாபமாக உயிர் இழந்தார். இதை பார்த்த அவரது தம்பி மற்றும் நண்பர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். பிறகு அவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஊருக்குள் சென்று நடந்த விபரீதத்தை பற்றி கூறி கதறி அழுதனர்.
உடனே அங்கு பொது மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி திருச்சூர் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதே போல இன்னொரு பரிதாப சம்பவம் திருவனந்தபுரம் அருகே நடந்து உள்ளது. காயங்குளம் என்ற இடத்தை சேர்ந்தவர் சசி. இவரது மகன் அபிலாஷ் (வயது 32). இவர் தான் தூக்கு போட்டு இறந்தது போல் நடித்து அதை செல்போனில் படம் பிடித்து அதை பேஸ் புக்கில் வெளியிட்டார். அதை பார்த்து அவரது உறவினர்கள், நண்பர்கள் மாலையுடன் வீட்டில் திரண்டபோது அபிலாஷ் நடத்திய நாடகம் என்பது தெரிய வந்தது.
இதனால் அவர்கள் அபிலாசை கண்டித்து விட்டு சென்றனர். இந்த நிலையில் மீண்டும் அபிலாஷ் அதே போல நாடகம் நடத்த திட்டமிட்டார். அதன்படி தனது அறையில் 2 செல்போன்களை ஆன் செய்து படம் பிடிக்கும்படி தயார் நிலையில் வைத்தார். பிறகு அந்த அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு தொங்குவது போல நடிக்க முயன்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறியதால் அபிலாஷ் தூக்கில் தொங்கி பரிதாபமாக உயிர் இழந்தார். வெளியில் சென்றிருந்த அவரது தந்தை சசி வீடு திரும்பியபோது இந்த காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மகனின் உடலை பார்த்து கதறி அழுதார்.
இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சென்று சாகசம் செய்வது, விபத்து ஏற்படுத்தியது போல நாடகமாடுவது என்று பலவிதமாக காட்சிகளை விபரீத காட்சிகளை செல் போனில் படம் பிடித்து மற்றவர்களை மிரள வைக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்கள் எண்ணிக்கை சமீபத்தில் அதிகரித்து வருகிறது.
இதுபோன்ற விபரீதங்களில் ஈடுபட வேண்டாம் என போலீசார் எச்சரித்தாலும் இந்த சம்பவங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
















