தாய்லாந்து நாட்டின் திடீர் ராணுவ புரட்சி ஏற்பட்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ராணுவ புரட்சி காரணமாக மக்கள் பீதியடைய தேவையில்லை என்றும், நாடு சகஜ நிலைக்கு திரும்பும் வரை மட்டுமே ராணுவம் ஆட்சியில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து நாட்டில் கடந்த 2006ஆம் ஆண்டு பிரதமராக இருந்த தக் ஷிஷின் ஷினவத்ரா என்பவரை பதவியில் இருந்து இறக்கிய ராணுவம், முதல்முறையாக ஆட்சியை தனது வசம் கைப்பற்றியது. அதன்பின்னர் நாட்டில் சகஜ நிலை நிலவியதால் தேர்தல் நடத்தப்பட்டது. அதில் ஷினவத்ரா சகோதரி, யுங்லக் வெற்றி பெற்று பிரதமரானார்.
ஆனாலும் யுங்லக் அவர்களின் அதிரடி நடவடிக்கைக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. தன்னை எதிர்ப்பவர்களை கட்டுப்படுத்த, பார்லிமென்ட்டின் கீழ்சபையை அவர் கலைத்தார். இதனால் தாய்லாந்து நாட்டின் எதிர்ப்பு போராட்டங்கள் நாடு முழுவதும் நடந்தது.
தாய்லாந்தின் அரசியல் அமைப்பு நீதிமன்ற உத்தரவின் படி, யுங்லக் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பதவி இழந்தார். அவருக்கு பின்னர் நிவட்டுரம்ராங், இடைக்கால பிரதமராக பதவியேற்றார். ஆனால் இவரும் ‘நானே நிரந்தர பிரதமர்; பதவியிலிருந்து இறங்கப் போவதில்லை’ என, அறிக்கை விட்டு மக்கள் விரோத போக்கை கடைபிடித்ததால் தாய்லாந்து நாட்டின் பிரபல கோடீஸ்வரர் தக்ஷின் ஆதரவாளர்களான, 3 நாட்கள் தொடர் போராட்டத்தை ஆரம்பித்தனர். இதனால் நாட்டில் பதட்டமான சூழ்நிலையை ஏற்பட்டதை அடுத்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
தாய்லாந்து நேரப்படி நேற்று மாலை 4.30 மணிக்கு ஆட்சியை ராணுவம் கைப்பற்றியுள்ளதாக ராணுவ தளபதி பிரயுத் சான் ஓச்சா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் மக்கள் பயப்படை தேவையில்லை என்றும், அவர்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் வழக்கம்போல அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என கூறியுள்ளார்.
ராணுவ ஆட்சி அமலுக்கு வந்துள்ள நிலையில் நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் பேச்சு நடத்தி வந்த ராணுவ கட்டிடத்துக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
















