மோடி பதவியேற்பு விழாவில் ராஜபக்சே கலந்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் வைகோ, இன்று டெல்லியில் மோடியை நேரில் சந்தித்து தனது ஆட்சேபத்தை தெரிவித்ததோடு, அழைப்பை மறுபரிசீலனை செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.
நரேந்திரமோடி வரும் 26ஆம் தேதி பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்த விழாவில் பங்கேற்பதற்காக சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து, இந்த விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்து கொள்வார் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
மோடி விழாவில் ராஜபக்சே கலந்து கொள்வதற்கு தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதேபோல், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ அறிவிக்கை வெளியிட்டார். மேலும், பா.ஜ.க. தலைவர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் மோடிக்கு கடிதமும் எழுதியிருந்தார்.
ராஜ்நாத் சிங்குடன் சந்திப்பு
இந்நிலையில், இன்று (23ஆம் தேதி) காலை புதுடெல்லியில் பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங்கை, ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்தித்து பேசினார். அப்போது, மோடி பதவியேற்பு விழாவில் ராஜபக்சே கலந்து கொள்ள அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தினார்.
இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ”மோடியின் தலைமையில் நல்லதொரு நிர்வாகம் நடைபெறும் என்று நம்புகிறேன். ஆனால், அவரது பதவியேற்பு விழாவில் ராஜபக்சே கலந்து கொள்ள அனுமதிக்கக் கூடாது. பா.ஜ.க.வின் ஆட்சியின் தொடக்க காலத்திலேயே இதுபோன்று நடக்கக்கூடாது. தொடக்கமே தவறாக போய் விடக்கூடாது. உங்கள் (பா.ஜ.க.) நன்மைக்காக சொல்கிறேன்” என்றார்.
மோடியிடம் நேரில் எதிர்ப்பு
இந்நிலையில் ராஜ்நாத் சிங்குடனான சந்திப்பை தொடர்ந்து, மோடியையும் சந்தித்துப்பேசினார் வைகோ. அப்போது பதவியேற்பு விழாவுக்கு ராஜபக்சேவை அழைத்ததற்கு தனது எதிர்ப்பை தெரிவித்த அவர், ராஜபக்சேவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
















