ஊடகவியலாளர்கள் படிக்கவும் தடை! திருப்பி அனுப்பினார் கோத்தா!!

Gotabaya-Rajapaksa5வட-கிழக்கு பகுதிகளை சேர்ந்த ஊடகவியலாளர்களிற்கென டிரான்ஸ்பரன்சி இன்ரர்நசனல்-இலங்கை நிறுவனத்தினால் நடத்தப்பட்ட புலனாய்வு அறிக்கையிடல் பற்றிய பயிற்சிப்பட்டறை பாதுகாப்பு அமைச்சினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.நேற்றைய தினம் மாலை பொலநறுவையின் கிரித்தல பகுதியிலுள்ள விடுதியொன்றினில் இப்பயிற்சி பட்டறை ஆரம்பமாகியிருந்தது.

எனினும் பயிற்சிப்பட்டறை ஆரம்பித்த ஒரு மணி நேரத்தினில் பாதுகாப்பு அமைச்சினால் குறித்த பயிற்சி பட்டறையினை உடனடியாக இடைநிறுத்த பணிக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.சிறிது நேரத்தினில் அங்கு வருகை தந்த அப்பகுதி பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி அங்கு தங்கியிருந்த வட-கிழக்கு ஊடகவியலாளர்களினை வெளியேற்றுமாறும் பணிப்பினை விடுத்துள்ளார்.

இந்நிலையினில் இன்று காலை குறித்த விடுதிக்கு அருகாகவுள்ள மின்னேரியா மற்றும் கிரித்தல படைமுகாம்களை சேர்ந்த அதிகாரிகள் விடுதிக்கு நேரினில் வருகை தந்து விசாரணைகளை நடத்தியுள்ளனர்.அத்துடன் பயிற்சிப்பட்டறை நடக்கவிருந்த மண்டபமும் இழுத்து மூடப்பட்டுள்ளது.எனினும் அருகாகவிருந்த திறந்த மண்டபத்தினில் பங்குபற்றுனர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்ட வேளை அதுவும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.அதன் தொடர்ச்சியாக மதியத்துடன் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படுகின்றமை தொடர்பினில் இப்புலனாய்வு அறிக்கையிடல் பயிற்சி பட்டறை ஏற்பாடாகியிருந்தது.வட-கிழக்கினில் புலனாய்வு அறிக்கையிடலில் ஊடகத்துறைக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவினை கருத்தினில் கொண்டு இவ்விசேட பயிற்சி பட்டறை திட்டமிடப்பட்டிருந்தது.ராவய செய்தி ஆசிரியர் லசந்த றுகுணுகே மற்றும் பிபிசி, சிலோன்ரூடே ஊடகவியலாளர் துஸ்யந்தி கனகசபை மற்றும் சான் விஜயதுங்க உள்ளிட்ட பலர் இப்பயிற்சி பட்டறையினில் விரிவுரைகளை ஆற்றவிருந்தனர்.

Tags: , ,

Leave a Reply