மோடி பதவியேற்பு விழா: டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு!

narendra-modi5டெல்லியில் நாளை நடைபெற உள்ள நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவையொட்டி உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.குடியரசுத் தலைவர் மாளிகைக்கு மேலே விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடியின் தலைமையிலான பா.ஜனதா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதனையடுத்து பாராளுமன்ற பா.ஜனதா கட்சியின் தலைவராக(பிரதமர்) மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.மோடி பிரதமராக பதவி ஏற்கும் விழா நாளை (திங்கட்கிழமை) டெல்லி ஜனாதிபதி மாளிகையில் மாலை 6 மணிக்கு நடக்கிறது.

மோடி பதவியேற்பு விழாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.

பாதுகாப்பு வளையத்திற்குள் டெல்லி

இதனையொட்டி குடியரசுத்தலைவர் மாளிகையின் திறந்தவெளி முற்றத்தில் 2500 பேர் அமர்ந்து பதவியேற்பு நிகழ்வை காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.ஒரே நேரத்தில் முக்கிய பிரமுகர்கள் கூட இருப்பதால் தலைநகர் டெல்லி பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.25,000 போலீஸார், துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

விமானங்கள் பறக்க தடை

குடியரசுதின விழா அணிவகுப்பின் போது வழங்கப்படுகிற பாதுகாப்பை போன்றதொரு பாதுகாப்பு இவ்விழாவிற்கும் வழங்கப்படுகிறது.குடியரசுத் தலைவர் மாளிகைக்கு மேலே விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.விமான எதிர்ப்பு துப்பாக்கிகளும் முக்கிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டுத் தலைவர்களை விமான நிலையங்களில் வரவேற்க சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சிறிய அமைச்சரவை

இதனிடையே மோடியுடன் நாளை சிறிய அளவிலான அமைச்சரவை மட்டுமே பதவியேற்கும் என்று தெரிகிறது.கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்களுக்கும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட உள்ளது.தேவைப்பட்டால் அமைச்சரவையை சில மாதங்களுக்குப் பிறகு விரிவாக்கம் செய்து கொள்ளலாம் என்று மோடி கருதுவதாக தெரிகிறது.

நரேந்திர மோடி திங்கள்கிழமை பிரதமராகப் பொறுப்பேற்கும்போது அவருடன் மூத்த பாஜக தலைவர்களான ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, நிதின் கட்கரி, சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஷோரி, ரவிசங்கர் பிரசாத், ராஜீவ் பிரதாப் ரூடி, அனந்த்குமார் ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெலுங்கு தேசம், அகாலி தளம், லோக் ஜனசக்தி ஆகிய கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த சில தலைவர்களும் அமைச்சரவையில் இடம்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. தனது அமைச்சரவையில் யாருக்கு என்ன இடம் என்பதை மோடி இதுவரை வெளிப்படுத்தவில்லை. எனினும், தனது அமைச்சரவை சிறிதாகவும் கச்சிதமாகவும் இருப்பதையே விரும்புவதாக மோடி தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளார்.

எனவே, அவருடன் குறைந்த எண்ணிக்கையிலான அமைச்சர்களே பதவியேற்பார்கள் எனத் தெரிகிறது. அதேபோல், அரசின் அமைப்பை மோடி மாற்றியமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில், சில அமைச்சகங்கள் இணைக்கப்படுவதும் ஒன்றாகும்.

Tags: , , ,

Leave a Reply