தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு உறுப்பினர்கள் என முத்திரை குத்தப்பட்டு இலங்கைக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கும் நானூற்று இருபத்து நான்கு புலம்பெயர் தமிழர்களிடம் இருக்கக்கூடிய சொத்துக்கள் மட்டுமன்றி அவர்களிடம் இருந்த சொத்துக்களையும் முடக்கும் அதிகாரத்தைக் கொண்ட வர்த்தமானி அறிவித்தலை சிறீலங்கா அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
சிறீலங்கா பாதுகாப்புத்துறைச் செயலர் கோத்தபாய ராஜபக்சவின் கட்டளைக்கு அமையக் கடந்த 06.05.2014 அன்று அச்சிடப்பட்ட இவ் வர்த்தமானி அறிவித்தல் கடந்த 22.05.2014 வியாழக்கிழமையன்று அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
இவ் வர்த்தமானி அறிவித்தலின் விளைவாகத் தடைசெய்யப்பட்டோராக அறிவிக்கப்பட்ட புலம்பெயர் தமிழர்களின் பெயரில் தமிழீழ தாயகத்தில் இருக்கக்கூடிய பாரம்பரிய காணிகள் உள்ளடங்கலான சொத்துக்கள், மற்றும் வாரிசுரிமையின் அடிப்படையிலான சொத்துக்கள் போன்றவையும், இவர்களின் பெயரில் முன்னர் இருந்து பின்னர் பிறருக்கு விற்பனை செய்யப்பட்ட அல்லது நன்கொடையாக உறவினர்களுக்கு அளிக்கப்பட்ட சொத்துக்களும் சிறீலங்கா அரசாங்கத்தால் சுவீகரிக்கப்படும் சூழல் எழக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

















