மோடி- மஹிந்த இன்று சந்திப்பு; மீனவர் பிரச்சினை, அரசியல் தீர்வு குறித்து பேசப்படலாம்

mahinda-modiஇந்தியப் பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திர மோடிக்கும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச­வுக்கும் இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் இடம்பெறவுள்ளது. மோடியின் பதவியேற்பு வைபவத்தில் பங்கேற்க அங்கு சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த இன்று முற்பகல் 10.30 மணிக்கு இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசுகிறார்.

இந்தச் சந்திப்புக்கு 25 நிமிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு நேற்றுத் தெரிவித்தது. இந்தியப் பிரதமராகப் பதவியேற்கவுள்ள நரேந்திரமோடி, நாளை சார்க் நாடுகளின் எட்டுத் தலைவர்களைத் தனித்தனியாகச் சந்தித்துப் பேசவுள்ளார்.

இன்று முதலில் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீட் ஹர் சாயை, காலை 9.30மணிக்கு நரேந்திரமோடி சந்திக்கிறார். இதனையடுத்து, மாலைதீவு ஜனாதிபதி அப்துல் கயூமை காலை 10.05 மணிக்கு அவர் சந்திப்பார். இதன் பின்னர் ஜனாதிபதி மஹிந்தவுடனான சந்திப்புக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்தச் சந்திப்பு நேற்றிரவு இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும் இவ்வாறு இல்லாமல் இன்றே சந்திப்புக்கு ஏற்பாடாகி உள்ளது. நரேந்திர மோடியின் பதவியேற்புக்கு ஜனாதிபதி மஹிந்த அழைக்கப்பட்டமையால் தமிழகத்தில் பெரும் எதிர்ப்பலைகள் எழுந்தன. இதனையடுத்து தமிழக முதல்வர் ஜெயலலிதா மோடியின் பதவியேற்பு வைபவத்தை புறக்கணித்தார்.

இதன் பின்னணியில் இந்தச் சந்திப்பு முக்கியத்துவமான தாகக் கருதப்படுகிறது. இந்தச் சந்திப்பின் போது, மீனவர்களின் பிரச்சினை மற்றும் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி நிலையான அரசியல் தீர்வு ஒன்றை எட்டுதல் ஆகிய இரண்டு விடயங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: , ,

Leave a Reply