மோடி பதவியேற்பு விழா: ரஜினி, விஜய் தவிர்த்தது ஏன்?

பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொள்ளாதது பா.ஜனதாவினருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தாலும்., தமிழகத்தின் உணர்வுகளை மனதில்கொண்டு அவர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளவில்லை எனத் தெரியவந்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு ரஜினியின் ஆதரவை பெற பா.ஜனதா தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், கடந்த காலங்களில் சந்தித்த பிரச்னைகள் காரணமாக ரஜினி பிடிகொடுக்காமல் நழுவிவிட்டார். இருப்பினும் பா.ஜனதாவுக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுப்பார் என்று தமிழக பா.ஜனதா தலைவர்கள் செய்தியாளர்களை சந்திக்குபோதெல்லாம் கூறிவந்தனர். ஆனால் அதற்கும் ரஜினி தரப்பில் எவ்வித ரியாக்‌ஷனும் வெளிப்படவில்லை.

ஆனாலும் மனம் தளராத பா.ஜனதாவினர் மோடியிடம் பேசி, தமிழகத்திற்கு பிரசாரத்திற்கு வரும்போது அவரை ரஜினியுடன் சந்திக்க வைக்க முயற்சி மேற்கொண்டனர். பா.ஜனதாவுக்கு ஆதரவு என்று ரஜினி வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும் அவர் மோடியை சந்தித்தாலே அது அவரது ரசிகர்களுக்கு சூசகமான தகவலாக வெளிப்படும் என்று எண்ணினர். அதன்படி ரஜினிக்கு மிகவும் வேண்டப்பட்ட புள்ளிகள் மூலமாக சென்னை வரும் மோடியை ரஜினி சந்திக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

நாளை இந்தியாவின் பிரதமராக வர வாய்ப்பு உள்ள ஒருவரை எப்படி சந்திக்க மாட்டேன் எனக் கூற முடியும்? என்று எண்ணிய ரஜினியும், மோடியை சந்திக்க சம்மதித்தார். அதனைத் தொடர்ந்தே சென்னையில் பிரசாரத்திற்கு வந்த மோடி, ரஜினியை அவரது வீட்டில் சந்தித்துப்பேசினார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மோடி, ரஜினி தனது நண்பர் என்று கூற, ரஜினியும், மோடி தனது நலனில் அக்கறை உள்ளவர் என்றும், தாம் உடல்நலமில்லாமல் இருந்தபோது அக்கறையுடன் விசாரித்தார் என்றும், மற்றபடி இந்த சந்திப்பு அரசியல் ரீதியிலானது அல்ல என்றும் கூறியிருந்தார்.

அவர் அவ்வாறு கூறியபோதிலும், மோடி – ரஜினி சந்திப்பு பா.ஜனதாவினருக்கு அரசியல் ரீதியாக உற்சாகத்தை கொடுத்ததை மறுப்பதற்கில்லை. அதேப்போன்று நடிகர் விஜயையும் கோவையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சந்தித்துப் பேசினார் மோடி.

இந்நிலையில்தான் தேர்தலில் மோடியும், பா.ஜனதாவும் அபாரமாக வெற்றிபெற, அதற்கு ரஜினி தனது டுவிட்டர் தளத்தில், ” உங்களது வரலாற்று சிறப்பு மிக்க வெற்றிக்கு எனது இதயப்பூர்வமான நல்வாழ்த்துக்கள் மோடிஜி!” என வாழ்த்தி இருந்தார்.

இதனையடுத்து மோடி பதவியேற்பு விழாவுக்கு ரஜினி மற்றும் விஜய் ஆகியோருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் மோடி பதவியேற்பு விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்த, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவும் தனது எதிர்ப்பை தெரிவித்திருந்தார். மேலும் சில தமிழ் அமைப்புகளும், ரசிகர் மன்றங்களை சேர்ந்தவர்களும் மோடி பதவியேற்பு விழாவில் ரஜினி பங்கேற்கக் கூடாது என குரல் கொடுத்த நிலையில், அவரது போயஸ் தோட்ட இல்லத்திற்கு அருகே தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர்.

மேலும் தமிழ் திரையுலக தரப்பிலும் ராஜபக்சே அழைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இயக்குனர் பாரதிராஜா, நடிகர் சத்யராஜ் உள்ளிட்டவர்கள் வெளிப்படையாக தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.

திரையுலக எதிர்ப்பு ஒருபுறம் இருந்தாலும், தமிழக முதல்வர் ஜெயலலிதா இவ்விழாவில் பங்கேற்கப்போவதில்லை என்பது உறுதியான நிலையிலேயே, ரஜினியும் மோடி பதவியேற்பு
விழாவில் பங்கேற்பதில்லை என முடிவு செய்ததாக தெரிகிறது. ஏனெனில் ராஜபக்சே அழைக்கப்பட்டது குறித்து ஜெயலலிதா அதிருப்தியாக உள்ள நிலையில், அவரை பகைத்துக்கொள்ள ரஜினி தயாராக இல்லை. மேலும் தன்னை வாழவைத்தது தமிழகமும், தமிழக மக்களும்தான் என்று மேடைகளிலும், படத்தின் பாடல்களிலும் அவ்வப்போது வெளிப்படுத்திவிட்டு, தமிழகத்தின் உணர்வுகளுக்கு மாறாக தாம் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்றால் அது கடும் விமர்சனத்தை ஏற்படுத்திவிடும் என்பதாலேயே அவர் விழாவுக்கு செல்லவில்லை. அதே சமயம் தம்மை மதித்து அழைப்பிதழ் அனுப்பியதற்காக தனக்கு பதில் தனது மனைவி லதாவை அனுப்பி வைத்திருந்தார் ரஜினி.

விஜய்

இதனிடையே ரஜினி போன்று நடிகர் விஜய்க்கு அழைப்பு அனுப்பப்பட்டபோதிலும், அவரும் மேற்கூறிய காரணத்திற்காகவே மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்கவில்லை எனத்தெரிகிறது.

அமிதாப்

இந்நிலையில் தமிழகத்தில் அரசியல் காரணங்கள் ரஜினிக்கும், விஜய்க்கும் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க தடைபோட்டபோதென்றால், பாலிவுட் பிரபலங்களான அமிதாப் பச்சன், லதா மங்கேஸ்கர், பிரீத்தி ஜிந்தா, ரவீனா டான்டன், ஷில்பா ஷெட்டி உள்ளிட்டோரும் பங்கேற்கவில்லை. ஆனால் இவர்கள் பங்கேற்காததற்கு தனிப்பட்ட காரணங்களே என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமிதாப் பச்சனை பொறுத்தவரை அவர்தான் குஜராத் அரசின் சுற்றுலாத்துறையின் பிராண்ட் அம்பாசிடராக உள்ளார்.மோடியும் பல்வேறு பேட்டிகளில் அமிதாப் பச்சனை புகழ்ந்துள்ளார். ஆனால் துரதிருஷ்டவசமாக அமிதாப் பங்கேற்க முடியாமல்போனதற்கு, ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி படப்பிடிப்பில் கலந்துகொண்டதுதான் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: , , ,

Leave a Reply