மன்னாரில் இந்திய நாட்டுப் படகுகள் அத்துமீறல் லட்சம் ரூபா பெறுமதியான வலைத் தொகுதிகள் பெரும் நாசம்

fishermanஇலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீன்பிடிப் படகுகளின் வருகை கடந்த சில தினங்களாக அதிகரித்துள்ளன. இந்தப் படகுகள் மன்னார் மாவட்ட மீனவர்களின் பல இலட்சம் ரூபா பெறுமதியான வலைகளை சேதப்படுத்தியுள்ளன என்று மன்னார் மாவட்ட மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்திய மீனவர்கள் நாட்டுப் படகுகள் மூலம் தற்போது இலங்கை கடல் பரப்பில் மீன் பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தலைமன்னார், பேசாலை, வங்காலைப்பாடு, சிறுத்தோப்பு, காட்டாஸ் பத்திரி,கருசல் ஆகிய கிராம கடற்பரப்புக்களில் பல நூற்றுக்கணக்கான இந்திய மீனவர்கள் நாட்டுப்படகுகளில் இரவு நேரங்களில் சட்ட விரோதமான முறையில் வந்து மீன் பிடியில் ஈடுபடுகின்றனர்.

இதன் போது குறித்த கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் போட்டுள்ள பல இலட்சம் ரூபா பெறுமதியான நண்டு மற்றும் கணவாய் பிடிக்கும் வலைகளை வெட்டி சேதப் படுத்தி விட்டுச் செல்வதாக மீன வர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதே வேளை பேசாலை கிராமத்தைச் சேர்ந்த சுமார் 40 இற்கும் மேற்பட்ட மீனவர்களின் வலைத்தொகுதிகள் இவ்வாறு சேதப்படுத்தப்பட்டுள்ளன என்றும், இவ் வலைத் தொகுதிகள் பல இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்தவை என்றும் பேசாலை மீனவ சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் தலைமன்னார் பொலிஸ் நிலையத்திலும், மன்னார் மாவட்ட கடற் தொழில் பணிமனையிலும் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். மீனவர்கள் கடன் அடிப்படையில் பல இலட்சம் ரூபா பெறுமதியான வலைகளை கொள்வனவு செய்து மீன்பிடியில் ஈடுபடுகின்ற நிலையில் குறித்த வலைகளை இந்திய மீனவர்கள் தங்களின் நாட்டுப்படகுகளை வைத்து சேதப்படுத்துகின்றனர். இதனால் வலைக்குரிய கடன் பணத்தை எவ்வாறு செலுத்த முடியும் என்ற ஏக்கத்தில் தாம் உள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்தனர்.

Tags: , , ,

Leave a Reply