இந்த விஷயத்துல இலங்கையைவிட பாகிஸ்தான் பரவாயில்லை

rajapaksa53-600அணு ஆயுத பலம் கொண்ட பாகிஸ்தானே 151 இந்திய மீனவர்களை விடுதலை செய்த நிலையில், தம்மாத்துண்டு இலங்கை நாடு ஐந்து மீனவர்களை மட்டுமே விடுவித்துவிட்டு அனைத்து மீனவர்களையும் விடுதலை செய்துவிட்டதாக தம்பட்டம் அடித்துக் கொண்டுள்ளது.

இந்திய பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்கும் விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே அழைக்கப்பட்டார். இதையடுத்து நல்லெண்ண நடவடிக்கை என்ற பெயரில் இலங்கை சிறையில் வாடும் ‘அனைத்து’ மீனவர்களையும் விடுதலை செய்வதாக இலங்கை அரசு அறிவித்தது. ஆனால் எத்தனை பேரை விடுவிப்போம் என்பதை வெளிப்படையாக அவர்கள் அறிவிக்கவில்லை.

நல்லெண்ண அடிப்படையில் மீனவர்களை விடுவிப்பது பற்றி பாகிஸ்தான் நாடு தனது நிலைப்பாட்டை தெளிவாக கூறியது. மொத்தம் 151 மீனவர்களை விடுவிப்போம் என்று கூறிய நவாஸ் ஷெரிப் அரசு அதன்படியே விடுவித்தது. அதுமட்டுமின்றி கைது நடவடிக்கையின்போது கைப்பற்றப்பட்ட 57 படகுகளையும் திருப்பி அனுப்ப நவாஸ் ஷெரிப் உத்தரவிட்டார். கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இதுவரை பாகிஸ்தான் அரசு இந்திய மீனவர்கள் 337 பேரை விடுவித்துள்ளது.

இலங்கை அரசு வெறும் 5 மீனவர்களை விடுதலை செய்துவிட்டுதான், அனைத்து மீனவர்களையும் விடுதலை செய்வோம் என்று கூறியுள்ளது. இதுகுறித்து தமிழக மீனவர் சங்க தரப்பினர் கூறுகையில், யாழ்பாணத்தில் 7 மீனவர்களும், கொழும்பு சிறையில் 5 மீனவர்களும், நீர்கொழும்பு சிறைச்சாலையில் 2 மீனவர்களும் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மீது போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்கு தொடர்ந்துள்ளது இலங்கை. எனவே கோர்ட் விசாரணையில் தங்களை நிரபராதிகள் என்று நிரூபித்து விடுதலையாக வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு உள்ளது. அல்லது இலங்கை அரசு வழக்குகளை வாபஸ் பெறுவதாக அறிவிக்க வேண்டியது அவசியம்.

ஐநாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் வாக்களிக்காமல் ஒதுங்கியிருந்ததற்காக சில மாதங்களுக்கு முன்பு இலங்கை விடுதலை செய்தது. இப்போது ராஜபக்சேவை, இந்தியாவுக்கு அழைத்துள்ளதற்காக மேலும் சில மீனவர்களை விடுதலை செய்வதாக இலங்கை அறிவித்துள்ளது. இந்தியா-இலங்கை நடுவே உறவை தொடர மீனவர்களை அந்த நாடு ஒரு பிணைய கைதிகளைப்போல பயன்படுத்திவருவது இதிலிருந்து தெரிகிறது.

அணு ஆயுதத்தை கையில் வைத்திருக்கும், பரபம்பரை எதிரி நாடான பாகிஸ்தான் இறங்கிவரும்போது, குட்டி நாடு இலங்கை இந்தியாவுக்கு டிமிக்கி கொடுக்கிறது. பாகிஸ்தான் குறித்த பகைமை உணர்வு பெரும்பான்மையாக இந்தியர்களிடம் உள்ளது. ஆனால், தமிழகத்தை தவிர பிற மாநிலங்களில் இலங்கைக்கு எதிரான மனப்பாங்கு இல்லை. நட்பு நாடு என்ற போர்வையிலேயே அனைத்து அக்கிரமங்களையும் இலங்கையால் கட்டவிழ்க்க முடிகிறது. தமிழக மக்களும், அரசியல்வாதிகளும், கடல்கடந்து வாழும் தமிழர்களும் இந்தியாவின் பிற மாநில மக்களுக்கு உண்மை நிலவரத்தை புரிய வைக்காததன் விளைவாக இலங்கை நட்பு நாடாக தொடர்கிறது.

Tags: , ,

Leave a Reply