13வது திருத்தச்சட்டம் குறித்து பேசியதை மூடி மறைத்த இலங்கை ஜனாதிபதி செயலகம், வெளிவிட்டார் சுஜாதா சிங்

modi-rajapakse-600-jpgபுதிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் வலியுறுத்திய விவகாரத்தை, இலங்கை ஜனாதிபதி செயலகம் மூடி மறைத்து விட்டது.

இருநாட்டுத் தலைவர்களுக்கும் இடையில் நேற்றுக்காலை புதுடெல்லியில் நடந்த சந்திப்புத் தொடர்பாக, இலங்கை ஜனாதிபதி செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

அந்த அறிக்கையில், நரேந்திர மோடியுடனான சந்திப்பில், நல்லிணக்க முயற்சிகள், மீள்கட்டுமான. புனர்வாழ்வு நடவடிக்கைகள், மீனவர்கள் விவகாரம், மற்றும் பிராந்திய நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்புகள் குறித்தே பேசப்பட்டதாக கூறப்பட்டிருந்தது.

13வது திருத்தச்சட்டம் குறித்து ஒரு வார்த்தையும் அதில் கூறப்பட்டிருக்கவில்லை.

ஆனால், நேற்று புதுடெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், 13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை நரேந்திர மோடி வலியுறுத்தியதை இந்திய வெளிவிவகாரச் செயலர் சுஜாதா சிங் வெளியிட்டுள்ளார்.

இதனால், 13வது திருத்தச்சட்டம் குறித்து பேசப்பட்ட விவகாரத்தை மூடிமறைக்க முயன்ற இலங்கையின் முயற்சி தோல்வி கண்டுள்ளது.

Tags: , ,

Leave a Reply