தமிழர் பிரதேசத்தில் காணி சுவீகரிப்புக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன் படையினரை அங்கிருந்து விலக்கி பொலிஸாரிடம் பொறுப்புக்களை ஒப்படைக்க வேண்டும்.
அத்துடன் பொலிஸ் அதிகாரத்தை வடக்கு மாகாண சபைக்குக் கையளித்தல் ஆகிய மூன்று விடயங்களையும் இலங்கை அரசு உடன் நடைமுறைப்படுத்துவதுடன், அவற்றைச் செயற்படுத்துவதில் ஏதேனும் இடர்பாடுகள் இருக்குமாயின் இந்தியா நேரடியாக தலையிட்டு உதவத் தயாராக இருக்கின்றது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் வலியுறுத்தியுள்ளார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கெடுப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கடந்த திங்கள் கிழமை புதுடில்லிக்குச் சென்றிருந்தார். மறு நாள் செவ்வாய்க்கிழமை, சார்க் தலைவர்களை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துக் கலந்துரையாடினார். அதனடிப்படையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இந்தச் சந்திப்புத் தொடர்பில் ஜனாதிபதி செயலக ஊடகப் பிரிவு ஓர் அறிக்கையையும், இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் வேறொரு அறிக்கையும் வெளியிட்டிருந்தனர். இவ்வாறானதொரு நிலையில் புதுடில்லியிலுள்ள இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி, இரு தரப்புத் தலைவர்களுடனான சந்திப்பில் ஆராயப்பட்ட விடயங்கள் நேற்று வெளியாகியுள்ளன. சுமார் 20 நிமிடம் நீடித்த சந்திப்பில், எந்த இழுபறியுமின்றி எடுத்த எடுப்பிலேயே நேரடியாக விடயத்தைக் கையாளும் ஓர் இறுக்க நிலையே இந்தியப் பிரதமர் கையாண்டுள்ளார். தமிழர் பிரதேசத்தில் காணி சுவீகரிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தல், படையினரை விலத்தி பொலிஸாரிடம் பொறுப்புக்களை ஒப்படைத்தல், பொலிஸ் அதிகாரத்தை மாகாண சபைக்குக் கையளித்தல் ஆகிய மூன்று விடயங்களையும் எடுத்த எடுப்பிலேயே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிரஸ்தாபித்துள்ளார்.
அவற்றைச் செயற்படுத்துவதில் ஏதேனும் இடர்பாடுகள் இருக்குமாயின் இந்தியா நேரடியாகத் தலையிட்டு உதவத் தயாராக இருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியப் பிரதமரின் காட்டமான இந்தக் கருத்துக்கு நேரடியாகப் பதில் கூறமுடியாத இலங்கைத் தரப்பு இந்த விடயங்களை ஒரே நாளில் நடைமுறைப்படுத்தி விடமுடியாது, இப்போதுதான் போர் முடிவடைந்திருக்கின்றது, இன்னும் காலம் பிடிக்கும் என்ற சாரப்பட பதிலளிக்க வழமை போன்று முயன்றுள்ளது.
அதற்கு இந்தியப் பிரதமர் நரேந்தி மோடி, போர் முடிவடைந்து 5 ஆண்டுகள் முடிவுற்றுள்ளது. இதற்கு மேலும் காலம் தேவைப்படுவது என்று சொல்வது அர்த்தமற்றது என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சுஜாதா சிங்கிடம், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இலங்கை தரப்பினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் தொடர்பில் கேட்டுள்ளார். அரசமைப்பின் பதின்மூன்றாவது திருத்தத்துக்கும் அப்பால் சென்று அதிகாரப் பகிர்வு அளிக்கப்படும் எனக் கூறப்பட்டது என்று இந்திய வெளிவிவகாரச் செயலாளர் பதிலளித்தார். அளித்த உறுதிமொழியை விரைவில் நீங்கள் நடைமுறைப்படுத்துவதை நாங்கள் எதிர்பார்த்திருக்கின்றோம் என்று மிகத் தெளிவாகவும், உறுதியாகவும் இந்தியப் பிரதமர் குறிப்பிட்டார் என்று புதுடில்லி இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
















