கடந்த 23ஆம் தேதி வெளியான ரஜினியின் கோச்சடையான் திரைப்படம் வெளியான மூன்றே நாட்களில் உலகம் முழுவதும் ரூ.42 கோடி வசூல் செய்து சாதனை செய்திருக்கும் இந்த வேளையில் ரஜினியின் டுவிட்டர் கணக்கில் 51 லட்சம் ஃபாலோயர்கள் இணைந்துள்ளதும் ஒரு சாதனையாக கருதப்படுகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 5ஆம் தேதி டுவிட்டரில் இணைந்தார். ரஜினி டுவிட்டரில் இணைந்த 25 நாட்களில் அவருடைய டுவிட்டர் கணக்கை 51 லட்சம் பேர் ஃபாலோ செய்கின்றனர். 25 நாட்களில் அரை மில்லியன் பாலோயர்கள் என்பது இதுவரை எந்த ஒரு இந்திய நடிகரும் செய்திராத சாதனையாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி தினசரி ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் இன்னும் இணைந்துகொண்டே இருப்பதால் இந்த எண்ணிக்கை கூடியவிரைவில் ஒரு மில்லியனை தொட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திரைப்படத்தின் வசூலிலும், டுவிட்டரின் ஃபாலோயர்களிலும் ரஜினியின் சாதனை மிஞ்ச ஆளில்லை என்று கோலிவுட் வட்டாரத்தில் கூறப்பட்டு வருகிறது. கோச்சடையான் திரைப்படத்தை அடுத்து ரஜினிகாந்த் லிங்கா திரைப்படத்தில் நடித்து வருவதால், வரும் ஜுன் மாதம் முதல் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் லிங்கா குறித்த தகவல்கள் தினசரி பதிவு செய்யப்படும் என்று ரஜினி வட்டாரத்தில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளன.
















