தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சந்தித்து பேச்சு (

tnalogo2கல்முனை மாநகர சபைக்குட்பட்ட தமிழ் மக்களின் நலன் குறித்த உயர்மட்ட பேச்சுவார்த்தை ஒன்று, மாநகர சபையில் அமைந்துள்ள முதல்வர் செயலத்தில் நேற்று நடைபெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா ஆகியோர் முன்னிலையில் கல்முனை மாநகர முதல்வரும் முஸ்லிம் காங்கிரஸின் பிரதிச் செயலாளர் நாயமுமான சட்டத்தரணி எம்.நிசாம் காரியப்பர் தலைமையில் இந்த உயர்மட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், பொன்.செல்வராஜா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன், ரெலோ செயலாளர் நாயகம் ஹென்ரி மகேந்திரன் ஆகியோருடன் மாநகர சபையின் தமிழ் கூட்டமைப்பு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

அத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அதன் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹஸன் அலி, கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் மு.கா. குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நீடித்த இந்த இரு தரப்பு பேச்சுவார்த்தையில் கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஜே.லியாகத் அலியும் பிரசன்னமாகியிருந்தார்.

இதன்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிர்வாகத்தின் கீழ் உள்ள கல்முனை மாநகர சபை, தமிழ் பிரதேசங்களின் அபிவிருத்தியிலும் தமிழ் மக்களின் நலன்களிலும் கூடிய அக்கறை செலுத்தி அவர்களினால் முன்வைக்கப்படும் குறைபாடுகளையும் தேவைகளையும் நிவர்த்தி செய்வதற்கு முன்வர வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளினால் வலியுறுத்தப்பட்டது.

இவ்வேளையில் உடனடியாக தீர்வு வழங்க வேண்டிய சில முக்கிய பிரச்சினைகள் குறித்தும் அவர்களினால் சுட்டிக்காட்டப்பட்டது. இவை குறித்து இரு தரப்பினரும் விரிவாக ஆராய்ந்ததுடன் சில பிரச்சினைகள் தொடர்பில் மாநகர முதல்வரினால் உடனடித் தீர்வுகளும் வழங்கப்பட்டன.

அதேவேளை இரு தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளின் பிரகாரம் தீர்மானிக்கப்பட்ட சில விடயங்களை எதிர்காலங்களில் அமுல்நடத்துவதாக மாநகர முதல்வர் நிசாம் காரியப்பர் உறுதியளித்தார்.

இப்பேச்சுவார்த்தை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில்;

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் முதல்வருடனான இச்சந்திப்பு மிகவும் திருப்திகரமாக அமைந்ததாகவும் கல்முனை வாழ் தமிழ் மக்களின் நலன்களை உறுதிப்படுத்துவதற்கு அவர்கள் உத்தரவாதமளித்திருப்பதாகவும் எதிர்காலங்களில் தொடர்ந்தும் இரு தரப்பினரும் சந்தித்து பேசுவது என இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Tags: , ,

Leave a Reply