ஒரு மனிதன் வாழ்க்கையில் சாதிப்பதற்கு திறமை மட்டும்தான் முக்கியம். வயதோ அல்லது கல்வித்தகுதியோ முக்கியம் இல்லை என்று திமுகவின் முன்னணி பேச்சாளரும், நடிகையுமான குஷ்பு தனது டுவிட்டரில் இன்று கூறியுள்ளார்.
ராகுல்காந்தியை எதிர்த்து போட்டியிட்ட ஸ்மிர்தி இரானிக்கு கல்வி அமைச்சர் பதவி கொடுத்ததால் காங்கிரஸ் கட்சி கடும் விமர்சனம் செய்துள்ளது. பட்டப்படிப்பு படிக்காத ஒருவர் கல்வி அமைச்சரா என்று கேலியாக விமர்சனம் செய்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை குஷ்பு, தனது டுவிட்டரில் “‘ஸ்மிர்தி இரானியின் கல்வி தகுதி பற்றி விமர்சிக்கப்பட்டு வருகிறது. சாதிப்பதற்கு கல்வி தகுதி அவசியம் இல்லை. சச்சின் தெண்டுல்கர், பில்கேட்ஸ், ரஜினி, கமல், உள்ளிட்டோர் உலக அளவில் புகழ் பெற்றுள்ளனர். இவர்கள் பட்டபடிப்பு படித்தவர்கள் அல்ல. சாதிப்பதற்கு திறமைதான் முக்கியம், படிப்பு அல்ல” என்று கூறியுள்ளார்.
குஷ்புவை போலவே பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் சிலரும் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராகவும், முன்னாள் தமிழக முதல்வராகவும் இருந்த காமராஜ் என்ன பட்டப்படிப்பா படித்திருந்தார் என்று பாஜகவினர் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் ராகுல்காந்தியை எதிர்த்து தேர்தலில் நின்றார் என்ற ஒரு தகுதியை மட்டும் வைத்து இரானிக்கு பதவி கொடுக்கப்படவில்லை என்றும், அவருக்கு ஒரு அமைச்சகத்தை நிர்வாகம் செய்யக்கூடிய திறமை உள்ளது என்பதை காங்கிரஸார் உள்பட பொதுமக்கள் அனைவரும் விரைவில் புரிந்துகொள்வார்கள் என்றும் பாஜக பதில் கூறியுள்ளது.
















