ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் சிறீலங்காவிற்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் வடக்கு-கிழக்கு தமிழ் மக்களுக்கு விளக்கமளிக்கும் வேலைத்திட்டமொன்றை தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் முன்னெடுத்துள்ளனர்.
இன்னும் ஓரிரு வாரங்களில் ஐ நா வின் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திபடி விசாரணைகள் தொடங்கும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாகவும், அது குறித்து மக்களுக்கு ஒரு தெளிவை ஏற்படுத்தவும், அவரகள் சாட்சியங்கள் அளிக்கும்போது கடைபிடிக்க வேண்டிய முறைகளை எடுத்துக் கூறுவதும் இதன் நோக்கம் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அவ்வகையில் முதலாவது விளக்கமளிக்கும் கூட்டங்களும் மக்கள் சந்திப்புகள் மற்றும் கலந்துரையாடல்கள் கிழக்கு மாகாணத்தில் கல்முனையிலும் மட்டக்களப்பிலும் நடைபெற்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், பொன். செல்வராசா , பா. அரியநேத்திரன் மற்றும் சீ. யோகேஸ்வரன் ஆகியோரும் மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பலரும் இந்தச் சந்திப்புகளில் கலந்து கொண்டானர்.
ஜெனீவா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இரண்டு மாதங்களாகின்ற நிலையில் இந்தத் தீர்மானம் தொடர்பில் மக்கள் மத்தியில் நிலவும் சந்தேகங்களையும் சிலரால் ஏற்படுத்தப்படும் குழப்பங்களையும் நீக்குவதே தமது நோக்கம் என தெரிவித்துள்ளார்கள்.
விசாரணை தொடர்பாக மக்கள் மத்தியில் நம்பிக்கை வர வேண்டும், விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்றும் அப்படி நம்பிக்கை வந்தால்தான் அவர்களும் அதில் பங்கு பற்ற முன் வருவார்கள், இல்லையேல் அது அர்த்தமற்றது என ஓதுங்கி கொள்வார்கள் என்றும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
















