இந்தியாவில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வங்கக்கடலில் மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 29 பேரை இலங்கைப் படையினர் சனிக்கிழமை நள்ளிரவு கைது செய்துள்ளனர்.
அதன்பின் நேற்றுக் காலை மேலும் 4 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுக்குச் சொந்தமான 7 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கைப் படையினரின் இந்த அடாவடிச் செயல் கண்டிக்கத்தக்கது.
அதுவும் கச்சத்தீவுக்கும் தலைமன்னாருக்கும் இடைப்பட்ட இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை இவர்கள் கைது செய்திருப்பது கடுமையான அத்துமீறலாகும். இத்தகைய செயலை இனியும் அனுமதிக்கக் கூடாது.
வங்கக் கடலில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை படையினர் கைது செய்வதும், சுட்டுக் கொல்வதும், தாக்குவதும் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்கின்றன.
இதுவரை 600க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் நடுக்கடலில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்னர் மீனவர்கள் மீதான இலங்கை படையினரின் அத்துமீறல் ஓயும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகும் தமிழக மீனவர்களை கைது செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
தமிழக மீனவர்கள் தொடர்பான பிரச்சினையில் இலங்கை அரசு இன்னும் திருந்தவில்லை. தொடர்ந்து நாடகமாடிக் கொண்டிருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.
இலங்கை அரசின் இடையூறுகளாலும், அத்துமீறல்களாலும் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பாதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள், நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு தான் தங்களுக்கு விடிவு காலத்தை ஏற்படுத்தித் தரும் என்று நம்புகிறார்கள்.
எனவே, கைது செய்யப்பட்ட 33 மீனவர்களையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும் மத்திய அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
















