இலங்கையில் மக்கள் நலன்புரிச் சேவைகளுக்காக லைகாவின் ஞானம் அறக்கட்டளை 589 மில்லியன்கள் நன்கொடை

lyca-gnanamலைகா மொபைல் நிறுவனத்தின் முழுமையான நிதியீட்டத்தில் இயங்கிவரும் லைகாவின் ஞானம் அறக்கட்டளை, புறக்கணிக்கப்பட்ட மக்கள் சமூகங்கள் நிரந்தரமான வாழ்வியல் ஆதாரங்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் பல்வேறு உதவிகளை இலங்கையுட்பட, உலாகளாவிய ரீதியில் பல்வேறு நாடுகளில் மேற்கொண்டுவருகிறது. 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கப்பட்டு சீரிய முறையில் அறம் புரிந்துவரும் இந்த நிறுவனம், யுத்தத்தினால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட இலங்கையில் மாத்திரம், தனது சமூகநல அறக்கொடைத் திட்டங்கள் தொடர்பான முதலாம் கட்டப் பணிகளுக்காக இதுவரை சுமார் 589 மில்லியன் ரூபாய்களை வழங்கியிருக்கிறது.

இந்தத் திட்டங்களின் அடிப்படை நோக்கமெல்லாம் யுத்தத்தின் பாதிப்புக்களால் வாழ்வாதாரங்களை இழந்து நீண்டகாலம் தவிக்கும் தமிழ் மக்கள், தங்களுக்கேயுரிய நிரந்தர வாழ்வாதாரங்களை மீளப்பெற்றுக்கொள்வதை உறுதிசெய்வதும், இதயசுத்தியான சமூகநல மேம்பாட்டுத்திட்டங்களூடாக மக்களின் வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்துவதுமேயாகும்.

இவற்றில் வன்னியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட்ட சிறார்களுக்கான கல்வி அனுசரணைத்திட்டம், வறிய குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்திட்டம், பல்கலைக்கழக மாணவர்களுக்கான கல்வி அனுசரணைத்திட்டம், யுத்தத்தில் அவயவங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கான பிளாஸ்டிக் சத்திரசிகிச்சைத் திட்டம், வன்னிமாவட்டத்தில் யுத்தத்தில் பாழடைந்த கிணறுகளைப் புனருத்தாரணம் செய்யும் திட்டம் போன்ற பல செயற்றிட்டங்கள் உள்ளடங்குகின்றன.

லைகாவின் ஞானம் அறக்கட்டளை என்பது ஒரு சுதந்திரமான அறக்கட்டளை அமைப்பாகும். பல்வேறு சமூகநலத்திட்டங்கள் மீது நேரடியாகவே நிதியீட்டம் செய்யும் இந்த அமைப்பு, மேலும் பல நிகழ்ச்சித்திட்டங்களுக்கு ”சிவன் அருள் இல்லம்” போன்ற உள்ளூர் அறக்கட்டளை மற்றும் சமூகநல அமைப்புக்களினூடாக நிதியீட்டத்தினைச் செய்து தனது சேவைகளை வழங்கிவருகிறது.

வன்னியில் சிறார்களுக்கான கல்வி அனுசரணைத்திட்டத்திற்கு மேலதிகமாக, யுத்தத்தில் பெற்றோர்களை இழந்து தவிக்கும் சிறார்களை சிவன் அருள் இல்லத்தின் உதவியுடன் அடையாளங்கண்டு, அவர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவு ஒன்றைத் தொடர்ச்சியாக மேற்கொள்வதனூடாக அவர்களின் கல்வி மற்றும் இதர நாளாந்த தேவைகளைப் பூர்த்திசெய்ய லைகாவின் ஞானம் அறக்கட்டளை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தத் தொடர் திட்டத்திற்காக சுமார் 20 மில்லியன் ரூபாய்களை அது நன்கொடை செய்திருக்கிறது.

மோசமாகப் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு உதவிகளை வழங்குவதனூடாக பாடசாலை செல்லாதிருக்கும் சிறுவர்களின் எண்ணிக்கையையும், பாடசாலையிலிருந்து இடைவிலகும் சிறுவர்களின் எண்ணிக்கையையும் குறைத்தல் என்பதுடன், வறுமையில் அல்லலுறும் அவர்களது குடும்பங்களுக்கு நிரந்தர வருமானமொன்றை வழங்கும் நோக்கில் வாழ்வாதார வசதிகளை எற்படுத்திக் கொடுப்பதுமே இந்தக் கல்வி அனுசரணைத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இந்தத் திட்டத்தின் பயனைப் பெறுவதற்கு வன்முறைகளினால் மிகவும் பாதிக்கப்பட்டு, கல்வியைத் தொடருவதற்கான சமமான வாய்ப்புகளேதுமின்றி, தமது அன்றாட தேவைகளுக்கே துன்பப்படும், வறுமைக்கோட்டிற்குக் மிகவும் கீழேயுள்ள சிறுவர்கள் இனங்காணப்பட்டிருக்கிறார்கள். வறுமையைக் குறைத்தல் அல்லது இல்லாதொழித்தல், சிறார்களின் போசாக்கினை அதிகரித்தல், மனிதாபிமானப் பண்புகளை வளர்த்தல், அறிவூட்டல் மற்றும் சுகாதாரம் தொடர்பிலான விடயங்கள் என்பன இத்திட்டதில் உள்ளடக்கப்படும் விடயங்களாகும்.

இதுமட்டுமன்றி, சிறப்புத்தேர்ச்சியுள்ள மாணவர்களின் மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்திவரும் யாழ் கனகரத்தினம் மஹா வித்தியாலயத்தின் விடுதியில் மாணவர்கள் தங்கியிருந்து கற்கைநெறிகளில் ஈடுபடுவதற்காக, லைகாவின் ஞானம் அறக்கட்டளை நிதியீட்டத்தினைச் செய்துவருகிறது. இதனூடாக, சிறப்புத் தேர்ச்சியுள்ள மாணவர்கள் நன்றாக நெறிப்படுத்தப்பட்டு, சிறந்த தகைமைகளுடன் உயர்கல்வி பெறுவது உறுதிசெய்யப்படும்.

அத்துடன், தெரிந்தெடுக்கப்பட்ட மிகவும் வறிய குடும்பங்களுக்கு மீன்பிடி வலைகள், விவசாய உபகரணங்கள் மற்றும் கணணிகள் போன்ற வாழ்வாதார உதவிகளை யும் லைகாவின் ஞானம் அறக்கட்டளையானது வழங்கிவருகிறது. மக்கள் மத்தியில் வாழ்வாதார செயற்திறன்களை ஊக்கிவிப்பதோடு, தேவைப்படும் அடிப்படை ஆரம்ப உதவிகளை வழங்குவதனூடாகத் தத்தமது குடும்பங்களின் நீண்டகால வாழ்வாதாரத்திற்கு உதவியளிப்பதே இதன் நோக்கமாகும்.

பேரூந்துகள் வழங்கும் திட்டம், கலாச்சார நிகழ்வுகளுக்கான உதவிகள், மருத்துவ வழங்கல்கள், வணக்கத்தலங்கள் புனருத்தாபனம், முச்சக்கரவண்டிகள் மற்றும் உழவியந்திரங்கள் வழங்கும் திட்டம் போன்ற ஏனைய திட்டங்களும் லைகா ஞானம் அறக்கட்டளை, இலங்கையில் மேற்கொள்ளும் ஏனைய திட்டங்களுக்குள் உள்ளடக்கப்படுகின்றன.

இலங்கையில் மட்டுமல்லாது இந்தியா, நைஜீரியா, சூடான் மற்றும் டான்ஸானியா போன்ற நாடுகளிலும் இந்த நிறுவனம் தனது அறக்கொடைப் பணிகளை வலுவாக மேற்கொண்டுவருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply