இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 29 பேரையும் விடுவிக்க அந்த நாட்டின் அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். கடந்த மாதம் மோடியின் பதவியேற்பு விழாவுக்காக இந்தியா வந்த இலங்கை அதிபர் ராஜபக்சே நல்லெண்ண நடவடிக்கையாக இலங்கைச் சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுவிப்பதாக அறிவித்தார்.
ஆனபோதும், மீண்டும் இலங்கைக் கடற்படையினரின் அட்டகாசம் தொடர்ந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராமேஸ்வரம், தங்கச்சிமடம் பகுதிகளை சேர்ந்த 29 மீனவர்கள், கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்கள் 29 பேரையும் ஜூன் 16-ம் தேதி வரை அனுராதாபுரம் சிறையில் அடைக்க இலங்கை மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது. 29 பேர் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்தாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால் தமிழக மீனவர்கள் கைதுக்கு பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், தமிழக மீனவர்கள் 29 பேரும் விடுதலை செய்யப்பட உள்ளதாக ராஜபக்சே அறிவித்துள்ளார். இதனை தமது டுவிட்டர் வலை தளத்தில் அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
















