யாழ்.குடாநாட்டில் படையினரது நில சுவீகரிப்பிற்கு எதிராக குரல் எழுப்பியவர்கள் அச்சுறுத்தல்களிற்கு உள்ளாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே உயர்பாதுகாப்பு வலயங்களாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களிற்கு அப்பால் ஆயிரக்கணக்கான் ஏக்கர் நில பரப்பினை படையினர் மக்கள் குடியிருப்புக்களிற்கு மத்தியிலும் ஆக்கிரமித்துள்ளனர்.
இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலப்பரப்புக்களை விடுவிப்பதாக ஒருபுறம் சர்வதேச சமூகத்திற்கு பிரச்சாரம் செய்து கொண்டு அவற்றினை நிரந்தரமாக சுவீகரிப்பதற்கு அரசு முயற்சிகளை ஆரம்பித்துள்ளது. இதற்கு எதிராக மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளன.
அவ்வகையில் திக்கம் அச்சுவேலி மற்றும் தென்மராட்சி நுணாவில் பகுதிகளில் நில சுவீகரிப்பிற்கு எதிராக மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்தவர்களையே தற்போது அச்சுறுத்த இராணுவ புலனாய்வு கட்டமைப்பு மற்றும் பொலிஸ் பிரிவுகள் முற்பட்டுள்ளன. குறிப்பாக அவர்களது வதிவிட முகவரிகள் தொலைபேசி இலக்கங்கள் என்பவை திரட்டப்பட்டுள்ளதுடன் அனாமதேய தொலைபேசி அழைப்புக்கள் மூலம் மிரட்டப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தகைய எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டால் காணாமல் போகவேண்டி இருக்குமென மிரட்டப்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர். இத்தகைய அச்சுறுத்தல்களையடுத்து இளவயதினர் சிலரை குடும்பங்கள் கொழும்பிற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
இதனிடையே மக்களது எதிர்ப்புப் போராட்டங்களையடுத்து காணிகளை அளவிடும் பணிகளினை மேற்கொள்ள முடியாதிருப்பதாக நில அளவைத்திணைக்களம் தனது கொழும்பு தலைமையகத்திற்கு அறிவித்துள்ளது.
















