தேவையில்லாத பொருட்களை விற்பது போல குழந்தைகளை விற்றேன். இதில் என்ன தவறு? பகீர் கேள்வி கேட்கும் பிரேம்ராஜ்

children-soldசந்தையில் ஆடு, மாடுகளை விற்பதைப்போல அரசு மருத்துவமனையில் பிறந்த தன் மூன்று குழந்தைகளைக் கூவி கூவி விற்று இருக்கிறார் சென்னையைச் சேர்ந்த ஒரு கல்நெஞ்ச தகப்பன் பிரேம்ராஜ். நான்காவது குழந்தையையும் விற்க முயன்றபோது கொதித்தெழுந்த பிரேம்ராஜின் மனைவி மஞ்சு, அவரை போலீஸில் பிடித்துக் கொடுத்திருக்கிறார்.

பிரேம்ராஜின் மனைவி மஞ்சு அளித்த பேட்டியில் இருந்து சில பகுதிகள்:

”பிரேம்ராஜ், ஒரு தனியார் நிறுவனத்துல காவலாளியா வேலை செய்றார். எனக்கு 16 வயசு இருக்கும்போது ரெண்டு பேரும் காதலிச்சு கல்யாணம் செஞ்சுகிட்டோம். பாடி தெற்கு மாடவீதியில் குடும்பம் நடத்தினோம். தினமும் குடிச்சுட்டு வந்து என்னை கொடுமைப்படுத்துவார்.

நான் கர்ப்பம் ஆகி, 2009-ல் எனக்கு எழும்பூர் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது. அப்போ, அங்க, வேலூரைச் சேர்ந்த பழனி என்பவரோட மனைவிக்கு ஆண் குழந்தை இறந்து பிறந்தது. அவங்களுக்கு ஏற்கெனவே இதேபோல நாலு குழந்தைங்க இறந்து பிறந்திருக்குது. இந்த விவரத்தை என் கணவரிடம் பழனி சொல்லி அழுதிருக்காரு. இதனால என்னோட குழந்தையை அவருக்குக் கொடுக்க முடிவுசெஞ்சு, அதுக்கான சம்மதத்தையும் என்கிட்ட மிரட்டி வாங்கிக்கிட்டார். தானமா கொடுக்கிறாருன்னுதான் நினைச்சேன். ஆனா, அன்னைக்கு குடிச்சுட்டு வீட்டுக்கு வந்த அவரோட சட்டைப்பையில் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்துச்சு. இவ்வளவு பணம் எப்படி வந்ததுன்னு கேட்டப்பதான் குழந்தையை 50 ஆயிரம் ரூபாய்க்கு வித்ததா சொன்னாரு. ஏன் இப்படி செஞ்சீங்கன்னு கேட்டதுக்கு அடிச்சி உதைச்சாரு. கொலை செஞ்சிடுவேன்னு மிரட்டினாரு.

பிறகு 2011-ல் மீண்டும் நான் கர்ப்பம் ஆனேன். எழும்பூர் ஆஸ்பத்திரியில் மீண்டும் எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஒரு குழந்தை இல்லாத தம்பதிக்கு 50 ஆயிரத்துக்கு வித்துட்டாரு. குழந்தைகளை விற்கும் பணத்தை, வேலைக்குப் போகாம குடிப்பாரு. பணம் காலியானதும் குடிக்கப் பணம் கேட்டு என்னை அடிப்பாரு. அப்படி ஒருநாள் அடிக்கும்போது, என்னைத் தவறான வழிக்குப் போகும்படி சொன்னாரு. சிலரை வீட்டுக்கும் அழைச்சு வந்து இருக்காரு. ஆனா, நான் சம்மதிக்கலை.

மூணாவதா நான் கர்ப்பம் ஆனேன். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் எனக்கு பெண் குழந்தை பிறந்தது. அதையும் விற்க விலை பேசினாரு. ஆனா, அதை யாரும் வாங்கலை. ஆஸ்பத்திரியில இருந்து வீட்டுக்கு வந்துட்டோம். 25 நாள் கழிச்சு அயனாவரத்தைச் சேர்ந்த ஒருத்தரிடம் 30 ஆயிரம் வாங்கிக்கிட்டு, அந்தப் பெண் குழந்தையையும் வித்துட்டாரு. என் கணவரோட கொடுமை நாளுக்கு நாள் அதிகமாயிடுச்சு.

2012-ல் நான்காவதாக கர்ப்பம் ஆனேன். கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்தியில பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையையும் விற்க ஏற்பாடு செய்தாரு. இதுக்கும் மேல அமைதியா இருந்தா அர்த்தம் இல்லைன்னு முடிவுசெஞ்சு, ராயபுரத்துல இருக்கிற குழந்தைகள் பாதுகாப்பு நல அமைப்புக்கு ரகசியமா தகவல் சொன்னேன். அவங்க வர்றதுக்குள்ள பிரேம்ராஜ் தப்பி ஓடிட்டார். அவங்க வந்து விசாரிச்சாங்க. குழந்தையை விற்றது தொடர்பான ஆவணங்கள் எதுவும் இல்ல. குறிப்பா, பிரேம்ராஜோட போட்டோகூட என்கிட்ட கிடையாது. இதனால் எழும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துட்டு, என்னையும் என் குழந்தையையும் பெரவள்ளூரில் உள்ள இல்லத்துல தங்கவெச்சாங்க. என் கணவர் விற்ற குழந்தைகள் திரும்பவும் எனக்கு வேணும். அதை எல்லாம் மீட்டுத் தருவாங்களா?” என்றார் கண்ணீரோடு.

குழந்தைகள் பாதுகாப்பு நல அமைப்பின் ஆணையர் குளோரி குணசீலி, ”பாடியில் உள்ள ஒரு தம்பதி குழந்தைகளைப் பெற்று விலைக்கு விற்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. விசாரித்தபோது, எங்களுக்கு யாரும் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. பிரேம்ராஜின் மிரட்டலுக்குப் பயந்து மஞ்சுவும் எதுவும் சொல்லவில்லை. மஞ்சுவுக்கு நான்காவது குழந்தை பிறந்து, அதையும் விற்க பிரேம்ராஜ் ஏற்பாடு செய்தபோது மஞ்சு எங்களுக்குத் தகவல் கொடுத்தார். எங்கள் புகாரின் பேரில் போலீஸார் இப்போது பிரேம்ராஜை கைதுசெய்திருக்கிறார்கள்” என்றார்.

இந்த வழக்கை விசாரித்த எழும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசுவிடம் பேசினோம். ‘2012-ல் கொடுக்கப்பட்ட புகாரில் பிரேம்ராஜ் மீது சுமத்தப்பட்ட குற்றங்களுக்குப் போதிய ஆதாரங்கள் இல்லை. இதனால் அவரைக் கைது செய்வதில் சில சிக்கல்கள் ஏற்பட்டது. குழந்தைகள் விற்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி பிரேம்ராஜை கைதுசெய்து இருக்கிறோம். குழந்தைகள் விற்பனையில் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த இருவர் பிரேம்ராஜுக்கு உதவியுள்ளனர். அவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குழந்தைகளை முறைகேடாக வாங்கியவர்களிடமும் விசாரணை நடத்தப்படுகிறது. குழந்தைகளை வாங்கியவர்கள் முறைப்படி தத்தெடுக்கவில்லை. விற்கப்பட்ட குழந்தைகள் வேண்டும் என்று குழந்தையின் தாய் மஞ்சு கேட்டால், மீட்டுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். மஞ்சுவின் குழந்தையைத் தவிர வேறு குழந்தைகளையும் பிரேம்ராஜ் விற்றுள்ளாரா என்றும் விசாரிக்கப்படுகிறது. ஒவ்வொரு குழந்தையையும் மஞ்சுவுக்குத் தெரிந்தே பிரேம்ராஜ் விற்றுள்ளார். இதனால், இந்தக் குழந்தை விற்பனையில் மஞ்சுவுக்கும் தொடர்பு இருக்கும் என்று சந்தேகம் உள்ளது” என்றார்.

போலீஸில் சிக்கிய பிரேம்ராஜ் கொடுத்திருக்கும் வாக்குமூலம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அந்த வாக்குமூலம் இதுதான்… ”எனக்கு ஆண்டவன் நல்ல ஆரோக்கியத்தைக் கொடுத்திருக்கிறான். இதனால், எத்தனை குழந்தைகள் வேண்டும் என்றாலும், என்னால் பெற முடியும். தேவைக்கு அதிகமான பொருட்களை விற்பதைப்போல குழந்தைகளை விற்று இருக்கிறேன். இதில் தவறு எதுவும் இல்லை. நான் யாரிடமும் கட்டாயப்படுத்தி குழந்தைகளை விற்கவில்லை. குழந்தை இல்லாத தம்பதிகள் கேட்டார்கள். கொடுத்தேன். அதற்கு அவர்கள் பணம் கொடுத்தார்கள். இதில் என்ன தவறு?” என்று கூலாக சொல்லியிருக்கிறார்.

அடக் கொடுமையே!

Tags: , ,

Leave a Reply