ஐ.நா. விசாரணைக் குழுவை நிராகரிப்பதன் மூலம் எழும் சர்வதேச அழுத்தங்களைச் சமாளிக்கவேண்டுமானால், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசு முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
அதற்கான பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் இவ்வாறு அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார. ஐ.நா. விசாரணைக்குழுவை இலங்கை அரசு ஏற்காவிட்டால் சர்வதேச ரீதியில் நாட்டுக்கு எத்தகைய அழுத்தங்கள் ஏற்படும்.
அவற்றைச் சமாளிப்பதற்கு அரசிடம் ஏதேனும் வியூகம் இருக்கிறதா? நுழை விசைவை வழங்க மறுப்பதன் காரணம் என்ன? என்று எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் வாசு இவ்வாறு தெரிவித்துள்ளார். “”ஐ.நா. விசாரணைக் குழுவுக்கு நுழைவிசைவு வழங்கினாலும், வழங்காவிட்டாலும் விசாரணைகள் எவ்வாறு அமையும் என்பது எமக்குத் தெரியும்.
எப்படியும் இறுதி அறிக்கை அரசுக்கு எதிராகவே தயாரிக்கப்படும். அதன் காரணமாகவே அரசு சர்வதேச விசாரணையை ஏற்கப் பின்னடிக்கின்றது. இவ்வாறு நிராகரிப்பதால் கடும் அழுத்தங்கள் ஏற்படும். அவற்றைச் சமாளிப்பதற்கு அரசு உள்நாட்டுப் பொறிமுறையைப் பலப்படுத்த வேண்டும். அதற்கான சிறந்த வழிமுறையாக நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக விரைந்து நடைமுறைப்படுத்த அரசு முன்வரவேண்டும். இவ்வாறு செய்தால் அனைத்துலக சமூகத்துக்கும் இலங்கை மீது நம்பிக்கை ஏற்படும்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
















