அமைச்சரின் செயலாளரெனக் கூறி 14 இலட்சம் ரூபா மோசடி செய்த பெண் – சம்பந்தப்பட்டவருடன் ஐவர் கைது!

arrestஅமைச்சர் ஒருவரின் செயலாளரென தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை பெற்றுத் தருவதாகக் கூறி இளைஞர், யுவதிகளிடம் பதினான்கு இலட்சம் ரூபாவினை மோசடி செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இப் பெண் வழங்கிய தகவலின் பேரில் மேலும் நான்கு பேரும் பதுளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் குறிப்பிட்ட வேளையில் கிடைக்காமையினால் பணம் கொடுத்த இளைஞர், யுவதிகள் பலரும் பொலிஸாருக்கு செய்யப்பட்ட புகாரையடுத்து பண மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட பெண் ஏற்கெனவே அமைச்சர் டிலான் பெரேராவின் அலுவலகத்தில் லிகிதராக சேவையாற்றியுள்ளார். தற்போது இப் பெண் பண்டாரவளையிலுள்ள இளைஞர் படையணியொன்றில் தமிழ் மொழி மூலமான விரைவுரையாளராக இருந்து வருபவரென்றும் பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக பதுளைப் பொலிஸார் தெரிவித்தனர்.

பணம் கொடுத்து ஏமாற்றப்பட்ட 17 இளைஞர், யுவதிகள் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்துக்கு செய்யப்பட்ட புகார்களையடுத்து அமைச்சர் டிலான் பெரேராவின் பணிப்பிற்கமைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு பதுளைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அறிவிக்கப்பட்டது. இதனையடுத்தே இப் பெண்ணும் ஏனைய நால்வரும் கைது செய்யப்பட்டனர்.

வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதற்கு கைது செய்யப்பட்டிருக்கும் தனுரா நலமி ராஜபக் ஷ என்ற சந்தேகப் பெண்ணிடம் பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டவர்கள் பதுளைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியுடனோ அல்லது வெளிநாட்டு வேலை வாய்ப்பு பனியகத்துடனோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Tags: , ,

Leave a Reply