வடமாகாணத்தின் முதலமைச்சராக்கப்பட்ட பின்னர் கடந்த 02.06.2014 அன்று முல்லைத்தீவு மாவட்டத்துக்குப்பயணம் செய்து முதல் தடவையாக மக்கள் குறைகேள் சந்திப்புகளை க.வி.விக்னேஸ்வரன் நடத்தியிருந்தமை தெரிந்ததே.
முதல் சந்திப்பு: முக்கிய கேள்விகள்!
ஆனால் மக்கள் பல நாட்களாக தமக்குள் பொத்திப்பொத்தி வைத்திருந்த கோபத்தீயை கொப்பளித்தது பற்றிய, அந்த கோபத்தீ விக்கியை சுட்டுப்பொசுக்கியது பற்றிய செய்திகள், தமிழ்த்தேசிய ஊடகங்களுக்கு போய்ச்சேரவிடாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டன.
தாயகத்திலிருந்து தமிழகத்து மேனி தடவி புலத்தில் போய் சிலிர்க்கும் செய்திகளின் உண்மைகளை மழுங்கடிப்பு செய்வதை நோக்கமாகக்கொண்டு எப்பொழுதும் பஞ்சாய் பறக்கிறது இங்கொரு கூட்டம்! ஏன் இந்த செய்திக்கொலை? கருத்துக்கொலை? கருக்கலைப்பு? சிசுக்கொலை? என்பது புரியவில்லை. ஆனால் இவர்கள் யாரை திருப்திபடுத்த செய்கிறார்கள்? எதற்காக இப்படி முயல்கிறார்கள்? என்பது பற்றியெல்லாம் மக்கள் நன்கு விழிப்பு பெற்று விட்டார்கள் என்பது மட்டும் தெளிவாகிறது.
மக்கள் நித்தமும் தம்மை சுற்றி என்ன நடக்கிறது? யார் யாரெல்லாம் வருகிறார்கள்? என்னென்ன சொல்கிறார்கள். எதை செய்கிறார்கள்? “பேச்சு பல்லக்கு தம்பி கால் நடையா?” என்பது பற்றியெல்லாம் அக்கு வேறு ஆணி வேராக அலசி ஆராய்கிறார்கள். அரசியலை உய்த்துணர்ந்து அவதானிக்க தொடங்கி விட்டார்கள். இப்போதெல்லாம் மக்கள் கேள்வி கேட்கின்றார்கள். ஆனால் ஊடகவியலாளர்கள் எப்போது கேள்வி கேட்கப்போகின்றார்கள்? என்பது தான் புரியாத புதிராக உள்ளது.
கொக்குத்தொடுவாய் தெற்கு பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெற்ற மக்கள் குறைகேள் சந்திப்பில், வடமாகாணசபையின் உப அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன், “முதலமைச்சர் வந்திருக்கிறார். மக்கள் உங்கள் கருத்துகளை கூறலாம்.” என்று கூறியதும்,
இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும், சேருவில பிரதேசசபையின் உறுப்பினருமாகிய க.சிவலோகேஸ்வரன் (சசி) கிராம மக்கள் சார்பில் வரவேற்புரையை நிகழ்த்தி விட்டு, கிராமத்தின் தேவைகள், நில அபகரிப்பு, வாழ்வாதார பிரச்சினைகள், மீனவர் பிரச்சினைகள் மற்றும் பல்வேறு பிரச்சினைகளை கூறிய பின்னர், விக்னேஸ்வரனின் அண்மைய கால செயல்பாடுகளை அவரின் முகத்துக்கெதிரேயே மிகக்கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். சூடு ஆறாமல் இதோ அங்கு இடம்பெற்ற சம்பாசனைகள் உங்களுக்காக…
பேச்சு பல்லக்கு தம்பி கால் நடையா?
“தேர்தல் விஞ்ஞாபனத்துக்கும் அதுக்கு மாறான உங்கட செயல்பாடுகளும் மிகப்பெரிய கேள்விக்குறிய எங்களுக்கு ஏற்படுத்தியிருக்கு. வல்வெட்டித்துறையில நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில, “பிரபாகரன் ஒரு மாவீரன். விடுதலைப்போராட்ட வீரன். சுட்ட மண்ணும் பச்ச மண்ணும் ஒட்டாது.” என்றெல்லாம் பேசி விட்டு, மே தின கூட்டத்தில மகிந்தவுடன் ஒப்பிட்டு எங்கட தேசியத்தலைவர சர்வாதிகாரி என்று குறிப்பிட்டிருக்கிறீயள்.
நாங்க கூட்டமைப்ப மலை போல நம்பியிருக்கிறம். கூட்டமைப்பால நிரந்தர தீர்வு ஒன்று கிடைக்கும் எண்டு தமிழ் சமுகம் முழுக்க நம்பியிருக்கு. ஆனா ஒட்டுமொத்த மக்களின்ட மனசையும் புண்படுத்துற மாதிரி உங்கட செயல்பாடுகள் இருக்கு.
முல்லைத்தீவு மாவட்டத்தையும், முள்ளிவாய்க்கால் இறப்பையும் முன்னிலைப்படுத்தி கூட்டமைப்பு தேர்தல் பிரசாரம் செய்து அமோக வெற்றியீட்டியது. ஆனா முல்லைத்தீவு மாவட்டத்துக்கு ஒரு அமைச்சுப்பதவிய தர்றதுக்கு கூட உங்களுக்கு மனசு சுத்தம் இருக்கேல்ல.
அதோட மாகாணசபைக்குள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடந்த போது, அதில வேறு கலந்து கொள்ளாமல் ஓடி ஒழிச்சிருக்கிறீயள்.
நாங்க ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எப், தமிழரசுக்கட்சி, விடுதலைக்கூட்டணி எண்டு பார்க்கேல்ல. நாங்க தமிழ் தேசியக்கூட்டமைப்பாத்தான் பார்க்கிறம். ஆனா பிரிவினைய ஏற்படுத்துற மாதிரி உங்கட கருத்துகள் இருக்கு. இது எங்களுக்கு வேதனைய தருது.” என்று கடுமையாக விமர்சித்தார்.
அரச சார்பற்ற தொண்டு நிறுவனம் ஒன்றில் பணி புரியும் முள்ளியவளை தண்ணீரூற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் அமலன் என்பவர்,
“முல்லைத்தீவு மாவட்டத்துக்கு ஏன் அமைச்சுப்பதவி தரேல்ல என்பதற்கு எமக்கு சரியான விளக்கம் வேணும். முள்ளிவாய்க்கால் மண்ணையும், மக்களையும் சொல்லித்தானே வாக்கு கேட்டனீங்கள். ஜெயிச்ச பிறகு எங்கள உங்கட கண்ணுக்கு தெரியாம போட்டுது. ஒரு வேளை உங்கள மகிந்த ராஜபக்ஸ தான் வேட்பாளரா நியமித்தாரோ என்று எங்களுக்கு சந்தேகமாக இருக்கு.
யார் தடுத்தாலும் நீங்க முள்ளிவாய்க்காலில இறந்த எங்கட மக்களுக்கு விளக்கேத்தி ஆத்ம சாந்தி பிரார்த்தனை செய்திருக்கோணும். இதுக்கே நீங்க இப்படி ஐயப்பட்டா, எப்பிடி இனப்பிரச்சினையை தீர்த்து வைப்பீர்கள் என்று உங்கள நாங்க நம்புவது.” என்று கடுமையாக விமர்சித்தார்.
ஐயோ நான் அரசியல் பேச வரல்ல! – ஆள விடுங்கப்பா மழுப்பிய விக்கி!
முகத்துக்கு எதிரே முன்வைக்கப்பட்ட விமர்சனங்களால் முகம் எல்லாம் கறுத்து முழி பிதுங்கி பேயறைந்தது போலான விக்னேஸ்வரன் ஒருவாறு சுதாகரித்துக்கொண்டு, “நான் அரசியல் பேச வரல்ல தம்பி, மக்கள் குறைகள கேட்க வந்திருக்கிறன்.” என்று மழுப்பினார்.
வயல் நிலங்கள் தொடர்பில் விக்கியின் அலட்டல் பதில்!
சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வயல் காணிகளை பற்றி பேசுவோம் என்று மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் கூறியதும், மக்கள் கண்ணீர் மல்க தமது பூர்வீக காணிகளை மீட்டுத்தருமாறு விக்கியிடம் உருக்கமாக கோரினர்.
அதற்கு விக்கி அளித்த பதில் இவ்வாறு இருந்தது.
“இது இலகுவான முறையில தீர்க்கப்படும் விடயமல்ல. ஜனாதிபதி இதில சம்பந்தப்படுவதால் இலகுவான முறையில இத கையால முடியாது. சில நபர்களை சந்திக்க வேண்டியிருக்கு. சில பேருடன் பேச வேண்டியிருக்கு. சட்ட நுட்பங்கள் பின்பற்றப்பட வேண்டும். வழக்கு தொடர வேண்டும்.” என்று கூறினார்.
விக்கிக்கு ஆளுமை இல்லையா?
மீண்டும் தொடர்ந்த இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும், சேருவில பிரதேசசபையின் உறுப்பினருமாகிய க.சிவலோகேஸ்வரன் (சசி),
“ஐந்து பிள்ளைகளின்ட தந்தையாக இருந்து கொண்டும், சாதாரண ஒரு பிரதேசசபையின் உறுப்பினராக இருந்து கொண்டும், முள்ளியவளை மத்தியில ஆயிரம் ஏக்கருக்கு மேல காடுகள அழிச்சு நடைபெறவிருந்த அமைச்சர் றிசாட்டின் குடியேற்ற நடவடிக்கைக்கு எதிராக பொது நல வழக்குப்போட்டு, அதத்தடுத்து நிறுத்தியிருக்கிறன். உயிர் அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாமல் இத நான் செய்தன்.
நடுத்தர குடும்பத்தில பிறந்தவன் நான், நீங்க சட்டத்தரணி நீதியரசர் என்று பல துறைகளில இருந்தவர். சட்ட நுணுக்கம் தெரிந்தவர். நாங்க பாமர மக்கள் உங்களுக்கு தெரிஞ்ச அளவுக்கு எங்களுக்கு தெரியாது.
வெலிஓயாவில கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10ம் திகதி ஜனாதிபதி வந்து தமிழரின்ட உறுதிக்காணிகள ரத்து செய்து சிங்களவர்களுக்கு வழங்கிய போது கொக்குத்தொடுவாய் பாடசாலைக்கு முன்னால கிட்டத்தட்ட நூறு பேரளவில மக்கள திரட்டி மகிந்தவுக்கு எதிரா ஆர்ப்பாட்டம் செய்தன்.
நான் சாதாரண ஒரு பொதுமகன் எனக்கு பாதுகாப்பில்ல. ஆனா நீங்க அப்பிடியில்ல. பதவியில இருக்கிறீயள். பொலிஸ் பாதுகாப்பு இருக்கு. சட்ட நுணுக்கம், சட்ட ஆட்சி தெரியும் என்றெல்லாம் சொல்லுறீயள். இந்த ஏழு மாசத்தில காணி, அரசியல் கைதிகள், காணாமல் போனோர் தொடர்பில ஒரு வழக்கையாவது உங்களால போட முடிஞ்சுதா?
தேர்தல் காலத்தில நீங்க சொன்னனீயள், சட்டத்த அப்பிடியே கையில எடுத்து வளைச்சு சட்டத்தின் மூலமா எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காணுவன் எண்டு. ஆனா ஏழு மாசம் கடந்தும் ஒரு வழக்கையாவது அரசாங்கத்துக்கு எதிரா உங்களால போட முடிஞ்சுதா? எனக்கிருக்கிற ஆளுமை உங்களுக்கு இல்லையா?”
என்று கேள்வி கேட்டு விக்கியின் வேட்டியை உருவி எடுத்து விட்டார்.
அமைச்சர் சத்தியலிங்கத்தின் படம்!
சிவலோகேஸ்வரனும், அமலனும் தமது கேள்விகளால் விக்கியை துளைத்தெடுத்துக்கொண்டிருக்கும் போது…
வடமாகாண சுகாதாரத்துறை அமைச்சர் ப.சத்தியலிங்கம், அதை வைத்து பின்னர் அவர்களை ஏதோ வசமாக கவனிக்கப்போவதான தோரணையில் அவர்களை மிரட்டும் பாணியில் அவர்கள் இருவரையும் தனது ஐபாட்டில் ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்தார்.
குறைகேள் சந்திப்பு முடிந்த பின்னர், “உங்கட பெயரென்ன. உங்கட தொலைபேசி இலக்கம் என்ன?” என்றெல்லாம் கேட்டு இருவரினதும் விவரங்களை குறித்துக்கொண்டார் விக்கி.
பின்னர் விக்கியும் சத்தியலிங்கமும் ஒரே வாகனத்தில் ஏறி பயணிக்க தயாரான போது, இடைமறித்த முள்ளியவளை தண்ணீரூற்றை சேர்ந்த அமலன்,
“என்ட கேள்விக்கு நீங்க சரியான பதில் தரேல்ல? பதில் சொல்லிட்டு போங்கள்.” என்று கூற,
அமைச்சர் சத்தியலிங்கம், “இதுக்கு முன்னர் மாவட்டத்தில நடந்த வேறு ஒரு கூட்டத்திலயும் உங்கள நான் பார்த்திருக்கிறன். அதே கேள்வியத்தான் திருப்ப திருப்ப கேட்கிறீயள். ஏன் எங்கள மட்டும் இப்படி ராக்கட் பண்ணி பின் தொடர்ந்து வாறீயள்.” என்று கடிந்து கொண்டார்.
அதற்கு அமலன், “என்ட கேள்விக்கு சரியான பதில் கிடைக்கும் வரைக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில உங்கள எங்க கண்டாலும் இந்தக்கேள்விய கேட்டுக்கொண்டே இருப்பன்.” என்று கூறினார்.
எமது செய்தித்தளத்தின் சிறப்புச்செய்தியாளர்,
-கவரிமான்-
செய்தி தொடர்பிலான மேலதிக தகவல்களுக்கு:
க.சிவலோகேஸ்வரன் (சசி) +094 7676 46470
















