உலகத் தமிழினத்தின் தலைவியாக உயர்ந்து நிற்கும் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா!

modi-jayaஈழத் தமிழர்கள்மீது உண்மையான அன்பு கொண்டிருந்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள். அதனால், ஈழத் தமிழர்களது பேரன்புக்கும் பெரு மரியாதைக்கும் உரியவராகத் திகழ்ந்த தம்பி பிரபாகரன் அவர்கள் மீதும் பாசத்தைக் கொண்டிருந்தார். அவருக்காக, புரட்சித் தலைவர் அவர்களது இல்லமும், அவரது மனக் கதவுகளும் என்றுமே திறந்தே இருந்தது என்றால் அது மிகை அல்ல. இதனை, தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் ‘போரும் சமாதானமும்’ என்ற நூலில் மிகத் தெளிவாகத் தெரிவித்திருந்தார். ஈழத் தமிழர்களது விடுதலைப் போராட்டத்திற்காக அள்ளிக் கொடுத்த வள்ளலாக அவர் அதனை விவரித்திருந்தார்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களது தடம் பற்றி நடைபோடும் தாயுள்ளம் கொண்ட புரட்சித் தலைவி செல்வி ஜெயலலிதா அவர்களும் மாமனிதர் எம்.ஜி.ஆர். அவர்களது பாணியில், ஈழத் தமிழர்களது அவலங்களுக்குப் பரிகாரம் தேடி வருகின்றார். தமிழகத்தின் முதல்வராக மீண்டும் பதவி ஏற்ற நாள் முதல், ஈழத் தமிழர்களது அவலங்களுக்காகத் தமிழக சட்ட சபையில் பல தீர்மானங்களை இயற்றியதுடன், சிங்கள அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாகவும் அறிவித்தார்.

நேற்றைய தினம், 03-06-2014 செவ்வாய்க்கிழமை புது டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தபோதும், தமிழகத்தின் தேவைகள் மட்டுமல்லாமல், ஈழத் தமிழர்களது விடிவுக்கான தனது தீர்மானங்களையும் அவரிடம் கையளித்துள்ளார்.

– இலங்கையில் நடந்த இனப் படுகொலையைக் கண்டித்து ஐநாவில் இந்தியா கண்டனத் தீர்மானம் கொண்டுவர வேண்டும்,

– தனித் தமிழ் ஈழம் அமைக்க இலங்கைத் தமிழர்களிடமும் புலம்பெயர்ந்த தமிழர்களிடமும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என அந்தத் தீர்மானத்தில் வலியுறுத்த வேண்டும்

என்பது தமிழக முதலமைச்சர் அவர்களது முக்கிய கோரிக்கைகளாக இருந்தது.

இதே போன்றதொரு காலப் பகுதியில், ஈழத் தமிழினம் இன அழிப்புக்குள்ளாக்கப்பட்டு, ஒன்றரை இலட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு, மூன்றரை இலட்சம் தமிழர்கள் மந்தைகள் போல், சிங்கள ஆட்சியாளர்கள் முள்வேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்ட காலப் பகுதியில், அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களும் புது டெல்லி சென்றிருந்தார். அப்போது, காங்கிரஸ் பிரதமராகப் பதவி ஏற்றிருந்த மன்மோகன் சிங்கையும், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியையும், அவரது பரிவாரங்களையும்கூட சந்தித்தார்.

மிகுந்த கௌரவமும், மரியாதையும் வழங்கப்பட்டிருந்த அன்றைய நாளில் அவரும் பல கோரிக்கைகளை காங்கிரஸ் தலைமையிடமும், பிரதமர் மன்மோகன் சிங்கிடமும் கையளித்திருந்தார். அவற்றினை நிறைவேற்றத் தயங்கிய காங்கிரஸ் கட்சியிடம் கோபித்துக்கொண்டு வெளிநடப்பும் செய்தார். அவர் கையளித்திருந்த எந்தக் கோரிக்கையும் ஈழத் தமிழர்களது கண்ணீரைத் துடைப்பதற்காக அல்ல… ஈழத் தமிழர்களது அவலங்களைப் போக்குவதற்காக அல்ல… ஈழத் தமிழர்களை சிங்களப் புதைகுழிகளிலிருந்து மீட்பதற்காக அல்ல…

மாறாக, வாரிச் சுருட்ட வசதியான மந்திரிப் பதவிகளைத் தனது வாரிசுகளுக்காகவும், தனக்கு வளம் சேர்க்கக்கூடியவர்களுக்காகவும் கேட்டுக் கோரிக்கை வைப்பதற்காகவே அவர் டெல்லி சென்றிருந்தார். அதற்காகவே, அவர் தனது கோபத்தையும் வெளிக்காட்டினார். அதை நிறைவேற்றிய பெருமையுடன் மீண்டும் சென்னை திரும்பினார். தமிழகத்து மக்கள் கூனிக் குறுகி, தமது வரலாற்றுத் தவறுக்காக வருந்திய நாட்கள் அது. ஆனாலும், அதைத் திருத்துவதற்காக, அவர்கள் ஐந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாகியது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில், தமிழக சட்ட சபையில் எதிர்க் கட்சியாக அமரும் தகுதியைக்கூட அவர்கள் தி.மு.க.வுக்கு வழங்கவில்லை. அதைப் புரிந்து கொண்ட கருணாநிதி அவர்கள், பரணில் போட்டு வைத்திருந்த ‘டெசோ’ வைத் தூசு தட்டி எடுத்து மீண்டும் தன் முகத்தில் பொருத்திக் கொண்டார். ஆனாலும், முற்றாக விழிப்படைந்த தமிழகத்தை அவரால் ஏமாற்ற முடியவில்லை. நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வால் ஒற்றைத் தொகுதியைக்கூட கைப்பற்ற முடியாமல் போனது.

இன்று, தமிழகத்தில் அனைத்தும் மாறிவிட்டது. ஈழத் தமிழர்கள் மீதான இன அழிப்பிற்குத் தலைமை தாங்கியவர்களும், அதற்குத் தவில் வாசித்தவர்களும் இப்போது தமிழகத்தில் இருந்தே துடைத்து எறியப்பட்ட நிலையில், தாய்ப் பாசத்திற்குரிய தலைவியாக ‘அம்மா’ அவர்கள் தமிழகத்திற்கு மட்டுமல்ல, தமிழினத்திற்கே தலைவி ஆகிவிட்டார். இப்போது, உலகத் தமிழர்களது ஒற்றை நட்சத்திரமாக, ஈழத் தமிழினத்திற்கான விடி வெள்ளியாக ‘அம்மா’ பெரும் சக்தி வடிவெடுத்துள்ளார்.

தங்களது அவலங்களையும், அவமானங்களையும், உணர்வுகளையும் வெளிப்படுத்த முடியாத பாவப்பட்ட மனிதர்களாக ஈழத் தமிழினம் வாழ்விழந்து நிற்கின்றது. கருணாநிதியைத் தமிழினம் நம்பியது போலவே, சம்பந்தர் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தமிழீழ மக்கள் நம்பிக் காத்திருக்கும் நிலையில் மீண்டும் அரங்கேற்றப்படவிருந்த ‘ஒன்றிணைந்த இலங்கைக்குள் தீர்வு’ என்ற கூட்டமைப்பு பாடிய சிங்களத்துப் பல்லவிக்கு முற்றுப்புள்ளி போடப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள், ‘தனித் தமிழ் ஈழம் அமைக்க இலங்கைத் தமிழர்களிடமும் புலம்பெயர்ந்த தமிழர்களிடமும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்’ என்ற தமிழர்களது விருப்பத்தினை பாரதப் பிரதமர் மோடி அவர்களிடம் தனது கோரிக்கையாக முன்வைத்துள்ளார்.

இதுவரை காலமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திருப்பி உச்சரிக்கத் தவறிய தமிழ் மக்களது விருப்பங்கள், தமிழக முதல்வர் அவர்களது வாயால், உலகப் பரப்பெங்கும் ஒலிக்க விடப்பட்டுள்ளது. ஈழத் தமிழர்கள் தமது இழந்த உரிமையை மீளப் பெறுவது தொடர்பாக, மீண்டும் அவர்களே முடிவு எடுக்க வேண்டும் என்ற இந்த ஜனநாயக உரிமையை யாரும் நிராகரிக்க முடியாது. இதுவே, உலகின் நடைமுறையாகவும் உள்ளது.

தமிழீழ மக்கள் தமது முடிவை, வட்டுக்கோட்டைத் தீர்மானம் முதல், வட மாகாணசபைத் தேர்தல் வரை இதனையே உறுதிப்படுத்தியுள்ளனர். புலம்பெயர் தமிழர்கள், வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீள் வாக்கெடுப்பு மூலமும் இதனையே வலியுறுத்தியுள்ளனர். இப்போது, தமிழக மக்களின் விருப்பங்களை, தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள், தனது கோரிக்கையாக, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம் கையளித்துள்ளார்.

இதனை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்படிக் கையாளப்போகின்றது என்பதிலேயே தமிழினத்தின் தலைவிதி தங்கியிருக்கின்றது. தமது விருப்பு – வெறுப்புக்களுக்கு அப்பால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்த் தேசிய ஆன்மாவை மகிமைப்படுத்த வேண்டிய கட்டாயத்தினுள் சிக்கி நிற்கின்றது. தமிழீழ மக்களுக்கு என்ன வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் முழுமையான அதிகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குக் கிடையாது. ஏனெனில், தமிழீழ மக்களின் பாதித் தொகையினர் சிங்கள அரச பயங்கரவாதம் காரணமாக, புலம்பெயர்ந்து பல நாடுகளிலும் சிக்குண்டுபோயுள்ளார்கள். அத்துடன், தமிழீழ மக்களுக்கு, தேர்தல் காலங்களில் வழங்கிய வார்த்தைகளையும், வாக்குறுதிகளையும் மீறி, சிங்கள விருப்பங்களுக்குள் அவர்களைச் சிறை வைக்கும் அதிகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குக் கிடையாது.

எனவே, தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களது ‘தனித் தமிழ் ஈழம் அமைக்க இலங்கைத் தமிழர்களிடமும் புலம்பெயர்ந்த தமிழர்களிடமும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்’ என்ற கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடனடியாக அங்கீகரிக்க வேண்டும். அதனை, வலியுறுத்தி உலகப் பரப்பெங்கும் கொண்டு செல்ல வேண்டும். இதுவே, தமிழீழக் கனவோடு மரணித்த அத்தனை ஆன்மாக்களுக்குமான அஞ்சலியாக அமையும்.

– தமிழ்ச்செல்வன்

Tags: , , ,

Leave a Reply