முன்னாள் படைத் தளபதி சரத் பொன்சேகா ஜெனரல் பட்டத்தை இழந்து விட்டதாகவும், இனிமேல் அதை அவர் பயன்படுத்த முடியாது என்றும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில், இன்று அமைச்சர் தினேஸ் குணவர்த்தன இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.
படை நீதிமன்றினால் குற்றவாளியாக காணப்பட்டு, தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, சரத் பொன்சேகாவிடம் இருந்து- ஜெனரல் பட்டம் மற்றும் அவர் பெற்ற விருதுகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு விட்டன.அவர் தனது ஓய்வூதியத்தையும் இழக்க வேண்டும்.
சிறிலங்கா அதிபர் மகிநத ராஜபக்ச 2010 ஓகஸ்ட் மாதம் இதற்கான ஆணையில் ஒப்பமிட்டுள்ளார்.எனவே, இனிமேல் அவரை ஜெனரல் என்று அங்கீகரிக்க முடியாது.
இரண்டு ஆண்டு சிறைவாசத்துக்குப் பின்னர், 2012 மே மாதம் சிறிலங்கா அதிபரின் பொதுமன்னிப்பு பெற்று விடுவிக்கப்பட்டிருந்தாலும், சரத் பொன்சேகாவின் குடியியல் உரிமைகள் மீளவும் வழங்கப்படவில்லை.
சரத் பொன்சேகா படையில் இருந்த போது- அவருடன் நெருக்கமான உறவு வைத்திருந்த படை. மற்றும் காவல்துறை அதிகாரிகள் எவரும் அரசாங்கத்தினால் இலக்கு வைக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
















