பழக விரும்பும் இலங்கையை கண்டுகொள்ளாத இந்தியா; மீனவர் விடுவிப்புத் தொடர்பில் வரவேற்பு ஏதும் இல்லையாம்

india-srilanka-flagஇந்தியாவின் புதிய அரசுக்கு நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் நோக்குடன் தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர் என்று இலங்கை ஜனாதிபதி தெரிவித்த போதும், இந்திய அரசு அதனைக் கண்டு கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியப் பிரதமரின் பதவியேற்பின் போதும் தமிழக மீனவர்களை விடுதலை செய்ய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ச உத்தரவிட்டிருந்தார். அப்போது அதற்கு இந்தியப் பிரதமர் உடனடியாகவே தனது வரவேற்பை வெளிப்படுத்தியிருந்தார். ஆனால் தற்போது இலங்கையின் நல்லெண்ண நடவடிக்கை தொடர்பில் இந்திய தரப்பினர் எந்தக் கருத்துக்களையும் வெளிப்படுத்தவில்லை.

கடந்த மாதம் 26 ஆம் திகதி இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றிருந்தார். இந்தப் பதவியேற்பு விழாவுக்கு சார்க் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. அதனடிப்படையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­சவுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. அதற்கு தமிழகத்தில் எதிர்புத் தெரிவிக்கப்பட்டது. அதனையும் மீறி ஜனாதிபதி இந்தியா சென்றார்.

இதன் போது இலங்கைச் சிறைகளிலுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு உத்தரவிட்டிருந்தார். இலங்கைச் சிறைகளில் மீனவர்களே இல்லாத நிலையிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ச மேற்படி உத்தரவைப் பிறப்பித்திருந்தார். இல்லாத மீனவரை விடுவிக்க உத்தரவிட்டிருந்தபோதும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­சவுக்கு, வரவேற்பு தெரிவிப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார்.

இவை யாவும் இரு தலைவர்களது ருவிற்றர் பக்கங்களில் கருத்துக்களாகப் பரிமாறப்பட்டிருந்தன. ஆனால் கடந்த 31 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்த தமிழக மீனவர்களை, விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச­ கடந்த 2 ஆம் திகதி இரவு 11 மணிக்கு ருவிற்றர் கணக்கில் பதிவிட்டிருந்தார்.

இந்தியாவின் புதிய அரசுக்கு நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் நோக்குடனேயே அவர்களை விடுதலை செய்வதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­சவின் இந்த நடவடிக்கைக்கு இந்தியத் தரப்பிலிருந்து எந்தப் பதிலும் வழங்கப்படவில்லை.

இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் என எவருமே கண்டுகொள்ளவில்லை. இந்தியப் பிரதமருக்கும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் கடந்த 27 ஆம் திகதி இடம்பெற்ற சந்திப்புத் தொடர்பிலான அறிக்கையில் இலங்கைத் தரப்பு 13 ஆவது திருத்தம் பற்றி பேசப்பட்ட விடயங்களை மூடிமறைத்தமையே இந்த முரண்நிலைக்கு காரணம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

Tags: , , ,

Leave a Reply